புதுடில்லி:''மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே தொடர்பு ஏற்படுத்தும் முக்கிய சாதனமாக கவர்னர்கள் உள்ளனர்,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்களின், 50வது மாநாடு டில்லியில் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே தொடர்பு ஏற்படுத்தும் முக்கிய பொறுப்பு கவர்னர்களுக்கு உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தின் மையப் புள்ளியாக கவர்னர்கள் உள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது போல், கவர்னர் என்பவர் எளிதில் தொடர்பு கொள்ள முடியா தவர் என்ற மனநிலை, மக்களிடையே உள்ளது. அதை மாற்ற வேண்டும். மக்களுடன் தொடர்பு உள்ளவர்களாக செயல்பட வேண்டும். மக்களை சந்தித்து, அவர்களுடைய பிரச்னைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும்.அரசியல் சாசனத்தின், 70வது ஆண்டை, நாளை கொண்டாட உள்ளோம். அரசியல் சாசனத்தின்படி, தங்களுக்கு உள்ள கடமைகளை, மக்கள் அறிய வேண்டும்.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கவர்னர் மாளிகைகளில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், வனம், நீர் நிலைகள் மாசுபடாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை.இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டின்போது, பழங்குடியினர் நலனுக்கான திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, கவர்னர்கள் குழுக்களாகப் பிரிந்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிடி ஆயோக்' அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இவற்றின் அடிப்படையில், பழங்குடியினர் நலனுக்காக திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.