சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி என, அனைத்து முக்கிய பதவிகளும் காலியாக உள்ளன.
அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசின் உயர்கல்வி துறையின் கீழ், 13 பல்கலைகள் செயல்படுகின்றன. இவற்றில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையும் ஒன்று. இந்த பல்கலையின் இணைப்பு பெற்றுள்ள, 700 கல்லுாரிகள், பி.எட்., - எம்.எட்., படிப்புகளை நடத்துகின்றன. இந்த படிப்புகளுக்கான பாட திட்டம் தயாரித்தல், புத்தகங்களுக்கு அனுமதி அளித்தல், மாணவர் சேர்க்கையை அங்கீகரித்தல், அதற்கான விதிமுறைகளை இயற்றுதல், தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை மேற்கொள்கிறது.
தற்போதைய நிலையில், இப்பல்கலையின் துணைவேந்தர் பதவி, பிப்ரவரி முதல், ஒன்பது மாதங்களாக காலியாக உள்ளது. பதிவாளர் பதவி ஓர் ஆண்டுக்கு மேலாகவும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவி, பல மாதங்களாகவும் காலியாக உள்ளது. நிர்வாகத்தை கவனிக்க, பதிவாளர் பொறுப்பில் பேராசிரியர் பாலகிருஷ்ணன்; தேர்வு அதிகாரி பொறுப்பில், பேராசிரியர் கோவிந்தன் ஆகியோர் கூடுதலாக பணியாற்றுகின்றனர். தேர்வுக்குழு அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும், துணைவேந்தர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.
இது குறித்து, கல்வியியல் கல்லுாரிகளின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் கூறியதாவது:பல்கலை நிர்வாகம் வெளிப்படையாகவும், திறன் மேம்பாட்டுடனும் நடக்க துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிகளில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். பல்கலையின் மூன்று முக்கிய பொறுப்புகளை காலியாக வைத்திருப்பது, பல்கலையின் தரத்தை கேள்விக்குறியாக்குகிறது. எனவே, முக்கிய பதவிகளை நிரப்புவதற்கு, உயர்கல்வி துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மறு மதிப்பீடு அறிமுகம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700 கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்துகின்றன. இந்த படிப்புகளுக்கான தேர்வை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடத்துகிறது.தேர்வில் விடை தாள் திருத்தம், சான்றிதழ் வழங்குதல், பட்டம் வழங்குதல் உள்ளிட்டவற்றையும், கல்வியியல்
பல்கலை மேற்கொள்கிறது. இந்த பல்கலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இதுவரை விடைத்தாளுக்கான மறு மதிப்பீடு, மறு கூட்டல் முறை அமலில் இல்லை.
சமீபத்தில், கல்வியியல் படிப்புகளுக்கான தேர்வு முடிவு வந்த போது, பல மாணவர்கள் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தும், அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என, இணையதள முடிவில் குறிப்பிடப் பட்டிருந்தது. இது குறித்து, கல்லுாரிகள்மற்றும் மாணவர்கள் தரப்பில், பல்கலைக்கு புகார் அளிக்கப்பட்டது.
பல்கலை நிர்வாகம் செய்த ஆய்வில், தொழில்நுட்ப காரணங்களால், தேர்வு முடிவில் குழப்பம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, நிலைமையை சமாளிக்க, மறு மதிப்பீடு முறை
அறிவிக்கப்பட்டு, மாணவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, மாணவர்களுக்கு சரியான மதிப்பெண் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மற்ற பல்கலைகளை போல, கல்வியியல் பல்கலையிலும், நிரந்தரமாக மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முறை அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக, எம்.எட்., படிக்கும் மாணவர்களுக்கு, இந்த
திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE