
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 94வது பிறந்த தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாட்டின் வறண்ட மாவட்டங்களில் ஒன்றான அனந்தபூரின் வறண்ட பூமியான புட்டபர்த்தியில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக அவர் செய்திட்ட நன்மைகள் காரணமாக அந்த ஊரே அவரது பிறந்த தினத்தை கோலகலமாக கொண்டாடியது.

பலரும் தங்கள் சொந்த பணத்தை போட்டு அன்னதானம் செய்தனர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர் அந்த ஊரில் உள்ள ஏழைக் குழந்தைகள் தாங்கள் விரும்பும் வரையிலான உயர்கல்வியை இலவசமாக படிக்க பல்வேறு கல்வி நிலையங்களை திறந்து வைத்ததும், இலவச உயர்சிகிச்சைக்கு உதவிடும் சிறப்பு மருத்துவமனை ஆகிய இரண்டு விஷயங்கள் போதும் அவரை அந்த ஊர் மக்கள் கொண்டாட.

அவரது மகா சமாதி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கல்லுாரி மாணவர்களின் பேண்ட் வாத்தியம் மற்றும் பஜனை பாடல்களை தொடர்ந்து சிறப்பான இன்னிசையை மாணவ மாணவியர் வழங்கினர்.

விழா நடந்த குல்வந்த் ஹாலில் சீனாவின் டிராகன் பொம்மைகள் விளக்கு அலங்காரங்கள் பிரதான இடத்தை பிடித்திருந்தது பக்தர்கள் கூட்டத்தால் அரங்கம் நிரம்பிவழிந்தது வந்தவர்கள் அனைவருக்கும் உணவு பிரசாதமாக வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது மாலையில் தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது ரதத்தில் சாய்பாபா படம் அழகுற இடம்பெற்று இருந்தது.
சாய்பாபாவின் பிறந்த நாளில் கலந்து கொண்ட இனிய நினைவுகளுடன் அங்கு இருந்து திரும்பினேன்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in