குட்கா அதிபர்களிடம் லஞ்சம்; மேலும் சில ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு சம்மன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'குட்கா' அதிபர்களிடம் லஞ்சம்; மேலும் சில ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு 'சம்மன்'

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (10)
Share
குட்கா, லஞ்சம்,  ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சம்மன்

சென்னை: 'குட்கா' ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, மேலும் சில, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது, 2013ல், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதித்தார். ஆனால், சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, மாதவராவ், செங்குன்றம் அருகே, சட்ட விரோதமாக குட்கா தயாரிப்பு ஆலை, குடோன் நடத்தி வந்தார்.இதன் பங்குதாரர்களாக,உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் இருந்தனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்போதைய, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்தின், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், சுகாதாரத் துறை அமைச்சர்விஜயபாஸ்கர், முன்னாள்அமைச்சர் ரமணா உள்ளிட்டோர், பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, டி.கே.ராஜேந்திரன், விஜயபாஸ்கர்உள்ளிட்டோரின் வீடுகளில், அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது.மேலும், மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட ஆறு பேரை அமலாக்க துறையினர் கைது செய்தனர்.

விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.தற்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள், குட்கா ஊழல் தொடர்பாக, தீவிர விசாரணையில் களமிறங்கி உள்ளனர். டி.கே.ராஜேந்திரன், வரும், 2ம் தேதியும், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன், 3ம் தேதியும், விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

இவர்களுடன், ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஜார்ஜ், நல்லசிவம்; தற்போது பணியில் உள்ள, காவல் துறை நவீனமயமாக்கல் துறை ஐ.ஜி., ஸ்ரீதர், மத்திய மண்டல ஐ.ஜி., வரதராஜு, திண்டுக்கல் டி.ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார் ஆகிய, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

விழுப்புரம் எஸ்.பி., ஜெயகுமார், வணிக புலனாய்வு பிரிவு எஸ்.பி., விமலா ஆகியோரும், இப்பட்டியலில் உள்ளனர். இவர்களிடம், இரண்டு கட்டங்களாக விசாரிக்க, அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X