இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் தமிழகம் சிறப்பு! புற்றுநோய் சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் தமிழகம் சிறப்பு! புற்றுநோய் சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம்

Updated : நவ 27, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (4)
Share
TN,Tamil Nadu, இலவச மருத்துவ காப்பீடு, திட்டம்,தமிழகம், சிறப்பு

'ஆயுஷ்மான்' எனப்படும் மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெற்றோரில், 42 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.ஏழை, எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை, 2018 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். ஆயுஷ்மான் என்றழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை இலவசமாக கிடைக்கும்.


அறிமுகம்


நாடு முழுவதும், 10 கோடி குடும்பங்கள், அதாவது, மக்கள் தொகையில், 40 சதவீதம் பேர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும். இதில், 'ஆன்காலஜி' எனப்படும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றோர் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.தேசிய சுகாதார ஆணையம் தயாரித்துள்ள இந்த ஆய்வு அறிக்கையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும், 2018 செப்., முதல், 2019 ஜூலை வரையிலான, 10 மாதங்களில், புற்றுநோய் சிகிச்சை பெற்றோர் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, 1.88 லட்சம் பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். இவர்களுக்கு அளித்த சிகிச்சைக்கான கட்டணங்களை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கோரியுள்ளன.

இதில், 72 சதவீத சிகிச்சைகள், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே மிகவும் அதிகமானோருக்கு புற்றுநோய் கிசிச்சை அளித்ததில், 42 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவில், 24.7 சதவீதம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


சிகிச்சை


இந்த ஆய்வின்படி, அரசு மருத்துவமனைகளைவிட, தனியார் மருத்துவமனைகளிலேயே அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல் அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. டாக்டருக்கான கட்டணம், அறுவை சிகிச்சைக்கான கட்டணம், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிகிச்சைக்கான கட்டணம் ஆகியவை, அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளில் மிகவும் அதிகமாக உள்ளன.

மருத்துவ சிகிச்சை, நவீன கருவிகள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்றவற்றில் மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளதும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இடையே இந்த வேறுபாடு உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளதற்கு முக்கிய காரணம், இங்கு, 413 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் மஹாராஷ்டிராவில், 167 தனியார் மருத்துவமனைகள் மட்டுமே சேர்ந்துள்ளன.

அந்தமான் நிகோபர், அருணாச்சல பிரதேசம், சண்டிகர், கேரளா, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சிகிச்சை கட்டணம் கேட்டு ஒரு மனுகூட வரவில்லை.அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும் என்ற போதிலும், தனியார் மற்றும் அரசின் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகளையே அதிகமானோர் நாடுகின்றனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


latest tamil news
ஆய்வு


புற்றுநோய்க்கு நீண்டகாலம் சிகிச்சை பெற வேண்டியுள்ளதாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகான தொடர் சிகிச்சை தேவைப்படுவதாலும், அதிகம் செலவிட வேண்டியிருக்கும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X