அழகி செய்த கலகம்... அதிர்ந்து போன கழகம்!

Added : நவ 26, 2019
Share
Advertisement
சித்ராவும், மித்ராவும் ஒப்பணக்கார வீதிக்குச் சென்றிருந்தனர். டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதியை ஸ்கூட்டரில் கடந்தபோது, ரோட்டின் இருபுறமும் பெயின்ட் பூசி இருந்தனர். பூம்புகார் முன், நடைபாதையில் கலர் துணியால் மேற்கூரை அமைத்திருந்தனர். ரோட்டோரம் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.''என்னக்கா, இது, வித்தியாசமா ஏதோ செஞ்சிருக்காங்க. மாடல் ரோடு,
அழகி செய்த கலகம்... அதிர்ந்து போன கழகம்!

சித்ராவும், மித்ராவும் ஒப்பணக்கார வீதிக்குச் சென்றிருந்தனர். டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதியை ஸ்கூட்டரில் கடந்தபோது, ரோட்டின் இருபுறமும் பெயின்ட் பூசி இருந்தனர். பூம்புகார் முன், நடைபாதையில் கலர் துணியால் மேற்கூரை அமைத்திருந்தனர். ரோட்டோரம் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.''என்னக்கா, இது, வித்தியாசமா ஏதோ செஞ்சிருக்காங்க. மாடல் ரோடு, இப்படித்தான் இருக்குமா,'' என, கேட்டாள் மித்ரா.''கிட்டத்தட்ட இதே மாதிரிதான், மாடல் ரோடு அமைக்கப் போறாங்க. அதுக்கு முன்னாடி, வணிக பகுதியில் பாதசாரிகளுக்கு போதுமான இடம் ஏற்படுத்திக் கொடுக்கறதுக்கான ஏற்பாடுகளை செய்றாங்க. பெயின்ட் பூசியிருக்கிற இடம் வரை நடைபாதையை அகலப்படுத்த போறாங்களாம். பரீட்சார்த்த முறையில, 14 நாள் சோதனை செஞ்சு பார்க்கப் போறாங்க.''நடந்து போறதுக்கு ஈஸியா இருக்கா. வாகனங்கள்ல போறதுக்கு சிரமம் ஏற்படுதா, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுதான்னு கார்ப்பரேஷன் ஆய்வு செய்யப் போகுதாம். மக்களுக்கு பயனுள்ளதா இருந்தா செய்வாங்க; இல்லேன்னா, விட்டுடுவாங்களாம்,''''ஓ... அப்படியா...''கார்ப்பரேஷன் அலுவலகத்துக்கு எதிரே உள்ள அடுமனையில் தேவையான ஸ்நாக்ஸ் வாங்கி விட்டு வெளியே வந்த சித்ரா, ''உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கறதுக்கு முன்னாடி, 'டெண்டர்' விடணும்னு கார்ப்பரேஷன் அதிகாரிங்க பறக்குறாங்களாமே...''''ஆமாப்பா, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல, ரூ.1,000 கோடிக்கு வேலை செய்றாங்க. வெள்ளலுார் கிடங்குல இருக்குற பழைய குப்பையை, 'பயோமைனிங்' முறையில அழிக்கிறதுக்கு, ரூ.100 கோடி 'ஒதுக்கி' வச்சிருக்காங்க.''இதுவரைக்கும் அரசு அனுமதி கொடுக்காம இருக்கு. உள்ளாட்சி தேர்தல் வரப்போறதுனால, ஏகப்பட்ட வேலைகளுக்கு, முறையான அனுமதி வாங்காம அவசர அவசரமா 'டெண்டர்' விடுறாங்க. அதே மாதிரி, 'பயோமைனிங்' திட்டத்துக்கும் அனுமதி வாங்கி, 'டெண்டர்' விடுறதுக்கு, ரொம்பவே மெனக்கெடுறாங்க,''''இப்ப, அந்த 'குப்பை' இன்ஜினியர் இருக்காரா, இல்லையா,''''என்னப்பா, இப்படி கேட்டுட்ட, சென்னையில இருந்து திரும்பி வந்து, எத்தனை வருஷமாச்சு. ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யின் 'பினாமி'களுக்கு நெருக்கமா இருக்கறதுனால, 'ஸ்மார்ட்' இன்ஜினியரா மாறிட்டாரு,''''அப்ப, ஏகப்பட்ட ஊழல் நடக்கும்னு சொல்லுங்க...''''கார்ப்பரேஷன்ல ஊழலும், முறைகேடும் இல்லாம இருக்குமா,'' என்ற சித்ரா, ''ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு ஒரு 'லேடி' சால்வை அணிவிக்கிற மாதிரியும், மேயர் 'சீட்' கேட்டு, விருப்ப மனு கொடுத்த மாதிரியும் 'வாட்ஸ் அப்'புல ஏகப்பட்ட போட்டோ வைரலா பரவிட்டு இருக்கே. விசாரிச்சியா,'' என, நோண்டினாள்.''ஆமாக்கா, எனக்கும் வந்துச்சு. அவுங்க, மாடலிங் துறையை சேர்ந்தவங்க. பேரு, சோனாலி. வெளிநாட்டுல நடந்த அழகி போட்டியில கலந்துக்கிட்டு, திரும்பி வந்தப்ப, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை பார்த்திருக்காங்க. முதல்வருக்கும், 'பொக்கே' கொடுத்திருக்காங்க. யாரோ, அவுங்களுக்கு உசுப்பேத்தி, மேயர் பதவிக்கு விருப்ப மனு கொடுக்க வச்சிருக்காங்க,''''இதனால, யாருக்கு என்ன லாபம்?,''''கார்ப்பரேஷன்ல அதிகார மையமாக இருக்காரே, வடவள்ளி இன்ஜினியரு. அவரோட மனைவியே மேயர் வேட்பாளர்ன்னு, கட்சி வட்டாரத்துல பேசிக்கிட்டு இருக்காங்க. சென்னையில நடந்த பொதுக்குழு கூட்டத்துல, 'வெடிக்கட்டும்'னு, யாரோ கொளுத்திப் போட்டுருக்காங்க. அதுமாதிரி எதுவும் நடக்கலை.''இருந்தாலும், ஆளுங்கட்சிக்குள்ள புகைச்சல் இருக்கறது வெளிச்சத்துக்கு வந்திருக்கு. மாடல் வைரல் கிளப்பி விட்டது யாருன்னு ஒரு குரூப் ஆய்வு செஞ்சிட்டு இருக்கு,''''ஆளுங்கட்சி தரப்புல அதிகார மையமா இன்னொருத்தர் இருக்காரே. அவரை கண்டாலே, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் நடுநடுங்குறாங்களாமே...''''அவரு, சமூக ஆர்வலர்ங்கிற பெயருல ஊருக்குள்ள வலம் வர்றாரு. இவ்ளோ நாளும் வீட்டுக்குள்ள இருந்து, நிர்வாகம் செஞ்சிட்டு இருந்தாரு. எம்.பி., எலக் ஷனுக்கு முன்னாடி, வெளியே தலைகாட்ட ஆரம்பிச்சாரு. இப்ப, கார்ப்பரேஷன் சார்புல நடக்குற விழாக்களுக்கு வர ஆரம்பிச்சிருக்காரு. 'கார்ப்பரேஷன் ஒர்க்' நடக்குற இடத்துக்கு, அதிகாரிகளோடு சேர்ந்து போயி, ஆய்வு செய்றதும், அதிகாரிகளும் பவ்யமா கைகட்டி வாய்பொத்தி பதில் சொல்றதும்தான் கொடுமையிலும் கொடுமை; இன்னும் என்னவேல்லாம் நடக்கப்போகுதோ தெரியல...,''''தி.மு.க., தரப்பிலும் மேயர் வேட்பாளர்ன்னு சொல்லிட்டு இருக்கறவங்கள காலி செய்ய 'டிரை' பண்றாங்களாமே...''''நானும் கூட கேள்விப்பட்டேன். முன்னாள் கவுன்சிலர் 'னாமீ', மேயர் பதவியை கைப்பத்துறதுக்கு முயற்சி செய்றாங்க. இவங்களுக்கு சான்ஸ் இருக்குறதாவும் பேசிக்கிறாங்க...''''அதே நேரத்துல இவருக்கு 'செக்' வைக்கிறதுக்காக, அதே பெயருல இருக்குற இன்னொரு 'லேடி'யை நிறுத்துறதுக்கு, 'பிளான்' போட்டுருக்காங்களாம். கொங்கு மண்டலத்தை சாராத, ரெண்டெழுத்து இனிசியல் கொண்ட, ரெண்டெழுத்து பெயருள்ள 'மாஜி' அமைச்சர், தனது 'பினாமி'யின் மனைவியை களமிறக்க, காய் நகர்த்திட்டு இருக்காராம். இதுனால, கட்சிக்குள் ஏகப்பட்ட புகைச்சல் ஓடிட்டு இருக்கு,''''ஒவ்வொரு வார்டிலும், புதுசா நிர்வாகிகளும் நியமிக்கிறாங்களாமே...''''ஆமா, உள்ளாட்சி தேர்தலுக்காக, ஒவ்வொரு வார்டுக்கும் புதுசா நிர்வாகிகள் நியமிக்கிறாங்க. அதனால, ஏற்கனவே பொறுப்புல இருக்குற கிளை செயலாளர்கள் கடுப்பில் இருக்காங்க. கட்சி கூட்டம், போராட்டம் நடத்துறப்போ, கை காசு செலவழிச்சு கூட்டம் கூட்டுறோம். தேர்தல் நேரத்துல முகம் தெரியாத வேறொருத்தருக்கு பொறுப்பு கொடுத்தால, எலக் ஷன் வேலையை எப்படி செய்றதுன்னு புலம்புறாங்களாம்.''ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாம இருக்குமா என்ன,''''இப்ப, கட்சியில அவரோட மருமகன் கை ஓங்கியிருக்குதாம். அவரு கை காட்டுறவருக்குதான் கவுன்சிலர் 'சீட்' கெடைக்குமாம். நம்மூரை சேர்ந்தவங்க பலரும், அவரை போயி சந்திச்சுட்டு வர்றாங்க. லட்சக்கணக்குல கரன்சியும் கைமாறுதாம்,''''அப்ப, எந்த கட்சி ஜெயிச்சாலும், 'பினாமி' ஆட்சிதான் நடக்கும்ன்னு சொல்லு,'' என்றபடி, ஐந்து முக்கு பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடைக்குள் நுழைந்தாள் சித்ரா.''அக்கா, மசியாத அரசு அதிகாரிகளுக்கு வசியம் வைக்குறாங்களாம்,'' என, அடுத்த விஷயத்துக்கு தாவினாள் மித்ரா.''என்னப்பா சொல்ற, அரசு அலுவலகத்துக்கு மாந்திரீகரை வரவழைச்சு யாகம் நடத்துறாங்களா,'' என, கேட்டாள் சித்ரா.''அரசு மருத்துவமனை நிர்வாக தரப்புல, மருந்து வாங்குறது, கருவி வாங்குறதுக்கு ஏகப்பட்ட 'டெண்டர்' விடுறாங்க. கீழ்மட்டத்துல இருந்து மேல்மட்டம் வரைக்கும் கணிசமா கமிஷன் கைமாறுமாம்.''ஒப்பந்தத்துல கையெழுத்து போடுற பொறுப்புக்கு, சில சமயங்கள்ல, நேர்மையான அதிகாரிங்க வந்துருவாங்களாம். அவுங்க, ஊழலுக்கு ஒத்துப்போகமா அடம் பிடிக்க சமயத்துல, ஒப்பந்தங்களை கையாளுற அதிகாரிங்க, பக்குவமா எடுத்துச் சொல்வாங்க. அவுங்க சொல்றதை புரிஞ்சவங்க, 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு, வேற ஊருக்கு கெளம்பிடுறாங்க. அதுக்கும் மசியாத அதிகாரிகளுக்கு, கேரளா போயி வசியம் செய்றாங்களாம். பல வருஷமா இப்படியும் நடக்குதாம்...,''''அடேங்கப்பா, இது நம்புற மாதிரியா இருக்கு?'' என, கேட்ட சித்ரா, கடையில் இருந்து வெளியே வந்தாள்.அப்போது, போலீஸ் ஜீப் அவர்களை கடந்து சென்றது.''அக்கா, போத்தனுார் சுற்றுவட்டாரத்துல இருக்கிற ஓட்டல்கள்ல, தொப்பிக்காரர் ஒருத்தரு, இன்ஸ்., பெயரை சொல்லி, 'ஓசி'யில உணவு அயிட்டங்களை எக்கச்சக்கமா பார்சல் வாங்கிட்டு போறாராம். ஸ்டேஷன்லயும் அவரது அதிகாரம் கொடி கட்டி பறக்குதாாம். தொப்பிக்காரர் வந்தாலே, போலீஸ்காரங்க பம்முறாங்களாம். அந்தளவுக்கு செல்வாக்கோடு வலம் வர்றாரு,''''ஒருவேளை, அவரும் 'பினாமி'யா இருக்கப் போறாரு,''''ஓ... அப்படியும் இருக்கலாமோ...'' என்ற மித்ரா, ''விளாங்குறிச்சி வி.ஏ.ஓ., ஆபீசுல, ஆன்லைன்ல சான்றுகளை ஆய்வு செய்து, 'அப்ரூவல்' கொடுக்கறதுக்கு ஒருத்தரை நியமிச்சிருக்காங்களாம். 'அப்ரூவல்' கொடுக்கறதுக்கு, ஆயிரம் ரூபாய் வரைக்கும் லஞ்சம் கேக்குறாங்களாம். அங்க இருக்கறவரு, வி.ஏ.ஓ., மாதிரி நடந்துக்குறாராம். அதனால, வேற வழியில்லாம, பொதுமக்கள் பணத்தை கொடுத்துட்டு வர்றாங்க....''இதே போல இன்னொரு மேட்டரும் கோவை பதிவுத்துறையில பெரிசா ஓடிட்டு இருக்கு... 80 லட்சம் ரூவா 'ரேட்' கொடுத்து போஸ்ட்டிங் வாங்கிட்டு வந்த அதிகாரி ஒருத்தரு, தன்னோட ஆபீஸ்ல, உறவுக்கார பசங்க ரெண்டு பேர, வசூலுக்குன்னே 'அன்அபீசியலா' நியமிச்சு சக்க போடு போடுறாராம்... சுண்டெலிகள தேடிட்டு இருக்கிற விஜிலென்ஸ்காரங்க இந்த பெருச்சாளியையும் கொஞ்சம் கவனிச்சா தேவலன்னு, சக அதிகாரிகளே புலம்புறாங்க... அடுத்த வாரம், இன்னொரு மேட்டர சொல்றேன்...' என்றபடி, கார்னரில் இந்த சிப்ஸ் கடையில், பார்சல் வாங்கினாள்.இருவரும், ஸ்கூட்டர் நிறுத்தியிருந்த இடத்துக்கு நடக்க ஆரம்பித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X