அஜித் பவாரின் உண்மையான முகம்! | Dinamalar

அஜித் பவாரின் உண்மையான முகம்!

Updated : நவ 28, 2019 | Added : நவ 26, 2019 | கருத்துகள் (64)
Share
மஹாராஷ்டிரா, அஜித் பவார், உண்மை, முகம்,வீடியோ

மும்பை: மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி, துணை முதல்வராகவும் பதவியேற்ற, தேசியவாத காங்., மூத்த தலைவர் அஜித் பவார், 60, கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார்.
சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க, காங்.,குடன் தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் பேச்சு நடத்தி வந்தார். இந்த பேச்சில் இழுபறி நீடித்து வந்த நிலையில், திடீரென பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்தார் அஜித் பவார். இவர் சரத் பவாரின் சகோதரரின் மகன்.
மஹாராஷ்டிரா அரசியலில் சரத் பவார் குடும்பத்துக்கு என, எப்போதும் ஒரு செல்வாக்கு உண்டு. ஜனநாயகம், அரசியல் சாசனம் என்பதைத் தாண்டி, குடும்ப நலன் என்பதே, இவர்களுடைய குடும்பத்தாருக்கு முக்கியம் என்பது, நீண்டகால வரலாறு. இதற்கு முன், அஜித் பவாரின் உண்மையான முகம் பலமுறை வெளிப்பட்டுள்ளது. இது குறித்து, அரசியல் நிபுணர்கள் கூறியதாவது:

கடந்த, 2014 லோக்சபா தேர்தலின்போது, மஹாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் இருந்தார். சரத் பவாரின் மகளும், தன் ஒன்றுவிட்ட சகோதரியுமான சுப்ரியா சுலேவுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்தார்.

பாரமதி லோக்சபா தொகுதிக்குட்பட்ட மாசல்வாடி கிராமத்தில் பிரசாரத்தின்போது, மக்களை மிரட்டும் வகையில் அவர் பேசினார். 'இந்தத் தொகுதியில் சுப்ரியா சுலேதான் வெற்றி பெறுவார். இந்த கிராம மக்கள் ஏதாவது மாற்றி யோசித்தால், உங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் செய்து விடுவேன்' என, மிரட்டினார்.

'இந்த கிராமத்துக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைக்க, 60 கோடி ரூபாய் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். பிரம்மனே நினைத்தாலும் செய்ய முடியாததை செய்துள்ளேன். அனைவரும் ஒழுங்கு மரியாதையா சுப்ரியாவுக்கு ஓட்டளிக்க வேண்டும்' என்று மிரட்டலில் அவர் ஈடுபட்டார்.

இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகாரும் கூறப்பட்டது. 'எட்டு ஆண்டுகளாக உறுதி அளித்தும் திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை' என, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கேள்வி எழுப்பினார். அந்த இளைஞரை, அஜித் பவாரின் ஆட்கள் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர். இது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதேபோல் மற்றொரு முறையும், வாக்களித்த மக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். தண்ணீர் கிடைக்காமல் சோலாபுர் விவசாயிகள் வாடினர். அதனால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அஜித் பவார், 'அணையில் தண்ணீர் இல்லாதபோது எப்படி தர முடியும். சிறுநீர் கழித்தா அணையை நிரப்ப முடியும். அவ்வாறு சிறுநீர் கழிப்பதற்கும், குடிநீரை குடிக்க வேண்டுமே' என்று கிண்டலும் கேலியுமாக பதிலளித்தார்.

பல ஊழல் வழக்குகள் என, தன் கோர முகத்தை காட்டியுள்ள அஜித் பவாரின் உண்மையான முகம், 'டிவி'க்கு பின்புறம் மட்டுமே தெளிவாக தெரியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X