இந்த செய்தியை கேட்க
திருப்பூர்: திருப்பூர் அருகே, இறுதிச் சடங்குக்காக பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகள் தற்போது அதனை எப்படி மாற்றுவது என செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.

2016ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில் திருப்பூர் அருகே உள்ள பூமலூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டிகள் ரங்கம்மாள், தங்கம்மாள். இவர்கள் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளாக 46 ஆயிரம் ரூபாய் சேமித்து வந்துள்ளனர். தாங்கள் இறந்துவிட்டால் அடக்கம் செய்ய செலவுக்கே பணம் தேவைப்படுமே என்பதற்காக இவற்றை சேர்த்து வைத்திருந்தனர். ஆனால் இந்த நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட விஷயமே இவர்களுக்கு தெரியவில்லை.

வயது முதிர்வு காரணமாக அவர்களின் மருத்துவ செல்விற்காக பிள்ளைகள் பணம் கேட்ட போது தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தனர். அதில் சுமார் ரூ.46 ஆயிரம் பழைய நோட்டுக்கள் இருந்ததைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மூதாட்டிகள் கூறுகையில் இறுதிச் சடங்குக்கு தேவைப்படும் என சேர்த்து வைத்திருந்தேன் என கூறினர்.இந்த நோட்டுகளை என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் விழித்துக்கொண்டு இருக்கின்றனர்.