15வது நிதி கமிஷன் பதவிக்காலம் நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

15வது நிதி கமிஷன் பதவிக்காலம் நீட்டிப்பு

Updated : நவ 29, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (2)
 15வது, நிதி கமிஷன்,பதவிக்காலம்,நீட்டிப்பு

புதுடில்லி: வரி மற்றும் இதர வருவாய்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வதற்கு ஆலோசனை வழங்கும், 15வது நிதி கமிஷனின் பதவிக்காலம், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:வரி மற்றும் வருவாய்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வதற்கு ஆலோசனை வழங்கும், 15வது நிதி கமிஷனின் பதவிக்காலம், இந்தாண்டு, அக்டோபரில் முடிவதாக இருந்தது. அது, தற்காலிகமாக, ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இதன் பதவிக் காலம், அடுத்த ஆண்டு அக்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


ஒப்புதல்



வரும், 2020 - 21 நிதியாண்டுக்கான அறிக்கையோடு, 2021 - 22 நிதியாண்டு முதல், 2025 - 26 நிதியாண்டு வரைக்குமான திட்டமிடல் அறிக்கையையும், நிதி கமிஷன் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. லோக்சபா தேர்தலின்போது, நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், மாநிலங்களில், நிதி கமிஷன் ஆய்வு செய்ய முடியவில்லை. அதனால், அதன் பதவிக் காலம் நீட்டிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள விமான நிலையத்தில், வரவேற்பு கூடம் கட்ட, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு சொந்தமான, 1,800 சதுர மீட்டர் நிலத்தை குத்தகை அடிப்படையில் வழங்கவும், மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த நிலம், ஆண்டுக்கு, 1 ரூபாய் லைசென்ஸ் கட்டணத்துடன், 15 ஆண்டுகளுக்கு, ஆந்திர பிரதேச கல்வி மற்றும் நல கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நடக்க உள்ள, ஐ.நா.,வின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


நிலைப்பாடு



ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2020ம் ஆண்டுக்கு முன் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வளர்ந்த நாடுகள் அளித்த உறுதிமொழி மற்றும் அதன் செயல்பாட்டுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை குறைக்க வேண்டும் என்பதே, இந்தியாவின் நிலைப்பாடு. மேலும், இந்த வேறுபாட்டால், வளர்ந்து வரும் நாடுகள் மீது அதிக சுமையை ஏற்றக் கூடாது என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.இவ்வாறு, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X