திருநெல்வேலி:பாபநாசம் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் மழைநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
இதனால் அகஸ்தியர் அருவியில் அதிக தண்ணீர் கொட்டுகிறது.திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தற்போது பிசான நெல் சாகுபடி நடந்துவருகிறது.இந்த விவசாயத்திற்கு பாபநாசம் அணைநீரை நம்பியுள்ளனர். தற்போது பெய்துவரும் மழையினால் பாபநாசம் அணைநீர் முழுக்கொள்ளளவான 143 அடியை எட்டியது.
இதனால் அணைக்கு வரும் நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. அணையின் உபரி நீர் வாயில் வழியாக தண்ணீர் திறந்துவிடபட்டது.
தாமிரபரணியில் தண்ணீர் அதிகம் வருவதால் பாபநாசத்தின் கீழ் இருக்கும் அகஸ்தியர் அருவியில் அதிக தண்ணீர் கொட்டியது.சேர்வலாறு அணையும் முழு கொள்ளளவான 156 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணையின் மொத்த உயரம் 118 அடி என்ற நிலையில் நீர்மட்டம் 77.70 அடியாக இருந்தது. அணைக்கு ஆயிரத்து 467 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது.