கார்டோசாட் - 3 செயற்கைக்கோள்: வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கார்டோசாட் - 3' செயற்கைக்கோள்: வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தம்

Updated : நவ 29, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (3)
Share
கார்டோசாட் - 3, செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., ராக்கெட்,புவி சுற்றுவட்ட பாதை

சென்னை, : புவியை மிகவும் துல்லியமாக படமெடுக்கும், அதிநவீன, 'கார்டோசாட் - 3' உட்பட, 14 செயற்கைக்கோள்களை, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவுக்கு, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.

அங்குள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ, நாட்டின் பாதுகாப்பு, வானிலை, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் வாயிலாக, செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுத்துகிறது.

அதன்படி, தற்போது, புவியை மிகவும் துல்லியமாக படமெடுத்து, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும், 'கார்டோசாட் - 3' செயற்கைக்கோளை, இஸ்ரோ தயாரித்து உள்ளது. அதனுடன், வணிக ரீதியாக, அமெரிக்காவின், 13 சிறு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, 26 மணி நேர, 'கவுன்ட் டவுனை' முடித்து, 'பி.எஸ்.எல்.வி., - சி47' ராக்கெட், நேற்று காலை, 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. பின், 17 நிமிடங்கள், 38வது வினாடியில், கார்டோசாட் - 3 செயற்கைக்கோள், 509 கி.மீ., உயரம் உள்ள, புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதன் ஆயுட்காலம், ஐந்து ஆண்டுகள். அடுத்த, 10வது நிமிடத்தில், மற்ற செயற்கைக்கோள்கள், அவற்றுக்கான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.மொத்தம், 1,625 கிலோ எடை உடைய கார்டோசாட் - 3 செயற்கைக்கோள், நகர்ப்புற திட்டமிடல், கிராம வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்கள், கடலோர பகுதிகள், ராணுவ பயன்பாட்டிற்கான எல்லை பகுதிகளை கண்காணித்தல் என, பலவித ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும், 74வது ராக்கெட்டான, பி.எஸ்.எல்.வி., - சி47, பி.எஸ்.எல்.வி., வகையில், 49வது ராக்கெட். இது, நடப்பாண்டில் ஏவப்பட்ட, ஐந்தாவது ராக்கெட். இது குறித்து, இஸ்ரோ தலைவர் கே.சிவன், விஞ்ஞானிகளிடம் பேசியதாவது:

தற்போது, விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட, கார்டோசாட் - 3 செயற்கைக்கோள், இதுவரை அனுப்பப்பட்ட, கார்டோசாட் வரிசையில், அதிநவீனமயமானது. இதுவே, மற்ற செயற்கைக்கோள்களை விட, புவியை மிகவும் துல்லியமாக படம் எடுத்து, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இது, பொது பயன்பாட்டிற்கு உரிய செயற்கைக்கோள்.அதிக சவால் உடைய, செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தியதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, என் பாராட்டுக்கள். வரும் மார்ச் மாதத்திற்குள், ஆறு ராக்கெட்களில், ஏழு செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X