சென்னை: பெண்ணை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமின் கோரி, சிதம்பரம் கோவில் தீட்சிதர், மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதிலளிக்க, சிதம்பரம் போலீசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலில், முக்குருணி விநாயகர் சன்னிதியில், அர்ச்சனை செய்யக் கோரிய பெண்ணை தாக்கியதாக, தீட்சிதர் தர்ஷனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் முன்ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்றத்தில், தர்ஷன் தாக்கல் செய்த மனு:கோவில் நடை சாத்தும் நேரத்தில், ஒரு பெண் மற்றும் அவருடன் வந்தவர்கள், பூஜை செய்யும்படி வலியுறுத்தினர். நானும் பூஜை செய்தேன். பூஜை செய்தது கேட்கவில்லை என்பதால், மீண்டும் நடத்தும்படி கேட்டனர். ஏற்கனவே தாமதமாகி விட்டதால், நடை சாத்தும் நேரம் எனக் கூறினேன். அப்போது, அந்தப் பெண் கையை உயர்த்தினார்.தற்காப்புக்காக, நான் தள்ளி விட்டேன். நடந்த சம்பவத்தை கூறாமல், வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. நான், அந்தப் பெண்ணை அடிக்கவில்லை; அவர் கீழே விழவும் இல்லை. வாய் வழி சண்டை தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை. அவர் காயமும் அடையவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையை பின்பற்றுகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, சிதம்பரம் போலீசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, டிச., ௩க்கு தள்ளி வைத்தார். ஏற்கனவே, தீட்சிதர் தாக்கல் செய்த மனுவில், குற்ற வழக்கு எண் இல்லாததால், வாபஸ் பெறப்பட்டது. தற்போது, குற்ற வழக்கு எண்ணை குறிப்பிட்டு, மனு தாக்கல் செய்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE