சென்னை :'டெல்டா' மாவட்டங்களில், யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு, கூட்டுறவு சங்கத்தினர் தான் காரணம் என்ற, புகார் எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும், சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் மட்டும், 12 லட்சம் ஏக்கரில், சம்பா பருவ சாகுபடி நடக்கிறது. சாகுபடி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், யூரியா உள்ளிட்ட உரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. தனியார் கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு உரங்கள் விற்கப்படுகின்றன. இந்த உரங்களை, மத்திய அரசிடம் இருந்து, வேளாண் துறையினர் மானியத்துடன் பெற்று, மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்துள்ளனர். தற்போது, போதுமான அளவில், உரங்கள் கையிருப்பில் உள்ளதாக, வேளாண் துறையினர் கூறி வருகின்றனர். இருப்பினும், டெல்டா மாவட்டங்களில், யூரியா தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உத்தரவில், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், உரம் விலையை அதிகரித்து விற்பனை செய்வதற்காக, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளதே இதற்கு காரணம்.
இதனால், தனியார் கடைகளில், அவற்றை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. கூட்டுறவு சங்க நிர்வாகிகள், வருமானம் பார்ப்பதற்காக, இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கு, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். எனவே, யூரியா தட்டுப்பாட்டிற்கு காரணமானவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில், வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலையிட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.