சென்னை, -பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில், 'பேஸ்புக்'கில் போலியாக கணக்கு துவக்கி, பண மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
சென்னை, அம்பத்துார் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர், சங்கர். நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் பொதுச்செயலரான இவர், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:காஞ்சனா உள்ளிட்ட படங்களை இயக்கி, நடித்தவர் ராகவா லாரன்ஸ். இவர், தன் பெயரில் நடத்தி வரும், மக்கள் சேவை நற்பணி மன்றம் சார்பில், ஏழை, எளியோருக்கு உதவி செய்து வருகிறார். பல மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க வைத்தும் வருகிறார். இவரது பெயரில், மர்ம ஆசாமிகள் சிலர், சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், போலியாக கணக்கு பக்கம் துவக்கி உள்ளனர்.
இதன் வாயிலாக, ராகவா லாரன்ஸ் ஏழைகளுக்கு உதவி செய்ய நன்கொட வசூலிப்பது போல, மர்ம ஆசாமிகள், வசூல் நடத்தி வருகின்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரு; தமிழகத்தில், சேலம், சென்னை கொளத்துார், வடபழனி, ஊட்டி, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள பலரிடம், ௭ லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், மோசடியில் ஈடுபட்டு வரும், மர்ம ஆசாமிகள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.இந்த புகார், மத்திய குற்றப் பிரிவின், சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE