'பிறந்தால் இவரைப் போல் பிறக்க வேண்டும். நாம் எல்லாம் அரசியலில் இருப்பதே வேஸ்ட்' என, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை பார்த்து, வயிற்றெரிச்சலில் புலம்புகின்றனர், ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள, ஒய்.எஸ்.ஆர் - காங்., நிர்வாகிகள்.
ஆந்திராவில் கடந்த முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, ஜெகன்மோகன் ரெட்டிக்கு வியூகம் வகுத்து கொடுத்தவர், பிரசாந்த் கிஷோர்.'பிரசாரத்தை எந்தெந்த ஊர்களில் நடத்த வேண்டும்; என்ன விஷயங்களை பேச வேண்டும்' என, தேர்தல் பிரசார அரிச்சுவடியை, ஜெகன்மோகனுக்கு கற்றுத் தந்தது, அவர் தான்.இந்த வியூகத்தை பயன்படுத்தி, ஆட்சியை கைப்பற்றினார், ஜெகன்மோகன் ரெட்டி. இதற்காக, பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துக்கு, பல கோடி ரூபாயை கட்டணமாக செலுத்தினார், ஜெகன்.ஆட்சியில் அமர்ந்த பின், தற்போது மீண்டும் பிரசாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார், ஜெகன். 'அரசின் திட்டங்களை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும். அப்போது தான், அடுத்த தேர்தலில் நமக்கு ஓட்டு கிடைக்கும்; அதற்கான வியூகங்களை வகுத்து கொடுங்கள்' என, பிரசாந்திடம் கூறியுள்ளார், ஜெகன்மோகன் ரெட்டி.இதைக் கேள்விப்பட்ட ஒய்.எஸ்.ஆர்.,காங்., கட்சியினர், 'பிரசாந்த் கிஷோர், மீண்டும் கரன்சி மழையில் நனையப் போகிறார். கொடுக்கிறது தெய்வம், கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இது தானோ' என, விரக்தியில் நனைகின்றனர்.