சென்னை 'நில அபகரிப்பு வழக்கின் விசாரணைக்காக, தி.மு.க., - எம்.எல்.ஏ., - மா.சுப்பிரமணியன், மனைவியுடன் இன்று ஆஜராக வேண்டும்' என, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, சைதாப்பேட்டை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், மா.சுப்பிரமணியன். இவர், கிண்டி தொழிலாளர் காலனியில், எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட, 'சிட்கோ' நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக, தன் மனைவி காஞ்சனா பெயரில் அபகரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, பார்த்திபன் என்பவர், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மா.சுப்பிரமணியன், காஞ்சனா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:கிண்டி தொழிலாளர் காலனியில் உள்ள வீடுகள், சிட்கோ தொழிற்சாலைகளில் பணிபுரிந்த, நலிந்த மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. அதில், எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை, 24 ஆண்டுகளுக்கு முன் வாங்கி, வசித்து வருகிறோம்.இந்த வீட்டின் அடிமனை, 'சிட்கோ' நிறுவனத்திற்கு சொந்தமானது.
இதுபற்றி, நான் தேர்தலில் போட்டியிட்டபோது, சொத்து விபரங்களை தாக்கல் செய்தபோது குறிப்பிட்டுள்ளேன்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.அதை ஏற்க மறுத்த போலீசார், இருவர் மீதும், ஜூன், 3ல் வழக்கு பதிந்தனர். பின், இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், இருவருக்கும், சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கியுள்ளது.இந்நிலையில், மா.சுப்பிரமணியன் தன் மனைவி யுடன், ஜூலை, 24ல், சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜரானார்.
இருவரிடமும், போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர். அதன் பின், சைதாப்பேட்டை, 11 வது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு, மா.சுப்பிரமணியன் மற்றும் காஞ்சனா ஆகியோர், இன்று ஆஜராக வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.