தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள்: எம்.பி.பி.எஸ்., இடம், 4,950 ஆக உயருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள்: எம்.பி.பி.எஸ்., இடம், 4,950 ஆக உயருது

Updated : நவ 28, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (8)
Share
3 ,மருத்துவ கல்லூரி,எம்.பி.பி.எஸ்.,சுகாதாரத் துறை அமைச்சகம்,அரசு பல் மருத்துவக் கல்லுாரி

சென்னை, தமிழகத்தில், மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவக்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

ஒரே ஆண்டில், ஒன்பது மருத்துவக் கல்லுாரிகள் துவக்க அனுமதி கிடைத்துள்ளதால், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 35 ஆக உயர்கிறது; எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 4,950 ஆக உயர்கிறது.தமிழகத்தில் உள்ள, 26 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதேபோல், 13 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 1,800 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மேலும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 1,760 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.


புதிய கல்லுாரிகள்

இந்நிலையில், தமிழகத்தில், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய ஆறு இடங்களில், மருத்துவக் கல்லுாரி துவக்க, ஒரு மாதத்திற்கு முன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.இந்த மருத்துவக் கல்லுாரிகளின் பூர்வாங்க பணிகளுக்கு, தலா, 100 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியது.

புதிதாக துவங்க உள்ள, ஆறு மருத்துவக் கல்லுாரிகளுக்கும், முதல்வர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர்.மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் இல்லாத, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகளை துவக்க, தமிழக அரசு அனுமதி கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.

இதையேற்ற, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், புதிதாக மூன்று மருத்துவக் கல்லுாரிகளை துவக்க, நேற்று அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லுாரியும், 325 கோடி ரூபாய் என, மொத்தம், 975 கோடி ரூபாய் மதிப்பில் துவக்க, அனுமதி வழங்கப் பட்டுள்ளது.இதில், மத்திய அரசு தலா, 195 கோடி ரூபாய்; மாநில அரசு தலா, 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது.

இதற்கான இடங்கள், ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. இந்த மூன்று மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பணிகளுக்கு, மாநில அரசு விரைவில் நிதி ஒதுக்கி, பூர்வாங்க பணிகளை துவக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒரே ஆண்டில், தமிழகத்தில் ஒன்பது அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது, முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


எம்.பி.பி.எஸ்., இடங்கள்தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில், ஏற்கனவே, 26 மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. கூடுதலாக, ஒன்பது மருத்துவக் கல்லுாரிகள், செயல்பாட்டுக்கு வர உள்ளன.ஒவ்வொன்றும், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி கொண்டுள்ளதால், கூடுதலாக, 1,350 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கும். இதனால், அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 4,950 ஆக உயரும். இதன்படி, அரசு மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை, 35 ஆக உயர்கிறது. சென்னை பல் மருத்துவ கல்லுாரியையும் சேர்த்தால், தமிழக அரசின் கீழ், 36 மருத்துவக் கல்லுாரிகள் செயல்படும்.


வரலாற்று சாதனை:பிரதமருக்கு முதல்வர் நன்றி மூன்று மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., நன்றி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:

தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி இல்லாத, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்க, மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசு திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க, பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கான முன்மொழிவுகள், தமிழக அரசால், குறுகிய காலத்தில், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்க, தேவையான நிலம் ஒதுக்கப்பட்டது.என் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு, புதிய அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, அக்., 23ல், தமிழகத்திற்கு ஒரே நேரத்தில், ஆறு புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி பெற்றதோடு, தற்போது கூடுதலாக, மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, அனுமதி பெறப்பட்டுள்ளது.


ஒரே ஆண்டில், ஒன்பதுஒரே ஆண்டில், ஒன்பது புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, அனுமதி பெறுவது, ஒரு வரலாற்று சாதனை. இதற்கென, 2,925 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில், 1,755 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழக அரசின் பங்காக, 1,170 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத, சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும், தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X