லக்னோ: 'அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்' என, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.'சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமருக்கு கோவில் கட்டலாம்; மசூதி கட்டுவதற்கு முஸ்லிம்களுக்கு அயோத்தியின் முக்கிய இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கின் ஒரு தரப்பான, உத்தர பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம், 'தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை' என, ஏற்கனவே அறிவித்துள்ளது. அதே நேரத்தில், 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது தொடர்பாக, அது எந்த முடிவும் எடுக்கவில்லை.இந்நிலையில், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியச் செயலர் ஜபார்யாப் ஜிலானி கூறியதாவது:உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்வது என, ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு, டிச., 9 வரை அவகாசம் உள்ளது. அதற்குள் மனு தாக்கல் செய்வோம்.சன்னி வக்பு வாரியத்தின் முடிவால், எந்த பாதிப்பும் ஏற்படாது. யாருடைய பெயரில் சீராய்வு மனு தாக்கல் செய்வது என்பது குறித்து, நிபுணர்களுடன் ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
எங்களுக்கு தாருங்கள்
ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்பது தொடர்பாக, சன்னி வக்பு வாரியம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில், உத்தர பிரதேச ஷியா மத்திய வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறியதாவது:சன்னி வக்பு வாரியம், 5 ஏக்கர் நிலம் வேண்டாம் என கூறினால், அதை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனால், அந்த இடத்தில் மசூதி கட்டமாட்டோம்; மருத்துவமனை கட்டுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE