சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு, நாளை முதல், ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழக அரசின் சார்பில், ரேஷன் கடைகளில், கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் தயாரிக்கும் பொருட்களுடன், ரொக்க பணம், பரிசு தொகுப்பாக வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு பொங்கலுக்கு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம், கரும்பு துண்டு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இவை, அரிசி கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக, அனைத்து கார்டுகளுக்கும் வழங்குவதாக, அரசு அறிவித்தது.
அறிவிப்பு
வசதி படைத்தவர்களுக்கு, பணம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இதனால், எந்த பொருளும் வாங்காத, 45 ஆயிரம் கார்டுதாரர்கள் தவிர, அரிசி, சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.வரும் பொங்கலுக்கு, எந்த பிரச்னையும் இன்றி, சர்க்கரை கார்டுகளுக்கும், ரொக்கம் வழங்க முடிவு செய்த அரசு, அதற்காக, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என, ஏற்கனவே அறிவித்து உள்ளது.
இதைத் தொடர்ந்து, 'இந்த ஆண்டு, அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள, அனைத்து குடும்பங்களுக்கும், தலா, 1,000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, நேற்றைய நிலவரப்படி உள்ள, 1.95 கோடி அரிசி கார்டுகளுக்கு, தலா, 1 கிலோ பச்சரிசி வழங்க, 19 ஆயிரத்து 506 டன் வாங்க, 54.32 கோடி ரூபாய் தேவை.
மேலும், 19 ஆயிரத்து, 506 டன் சர்க்கரைக்கு, 92.65 கோடி ரூபாய்; இரண்டு அடி கரும்பு துண்டுக்கு, 29.26 கோடி ரூபாய்; முந்திரி, திராட்சை, ஏலக்காய்க்கு, 78.02 கோடி ரூபாய்; துணி பைக்கு, 39.01 கோடி ரூபாய்; 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க, 1,950.59 கோடி ரூபாய், இதர செலவுகளுக்கு, 2 கோடி ரூபாய் என, 2,245.85 கோடி ரூபாய் செலவாகும்.
கடிதம்
மேலும், சர்க்கரை கார்டு தாரர்கள், அரிசி கார்டுகளாக மாற்ற, நாளை வரை அவகாசம் உள்ளது.
அவ்வாறு மாறுவோருக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். இதனால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, 2,363.13 கோடி ஒதுக்குமாறு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர், அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதை பரிசீலித்த அரசு, 2,295 கோடி ரூபாய்க்கு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டு உள்ளது.உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதனால், நாளை காலை, சென்னை, தலைமை செயலகத்தில், அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைக்க உள்ளார். மேலும், பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும், முதல்வர் துவக்கி வைக்கிறார். பொங்கல் பரிசு, வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை துவக்கிய பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அவற்றை தொடர்ந்து வழங்க, எந்த தடையும் இருக்காது.
ஊழியர்கள் போர்க்கொடி!
ரேஷன் கடைகளில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிபுரிகின்றனர். அனைவருக்கும், ஓய்வு பெறும் வரை, அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும், ரேஷன் பொருட்களுடன் சேர்த்து, மளிகை பொருட்களை விற்கவில்லை எனக் காரணம் கூறி, அதிகாரிகள், 3,000 ரூபாய் வரை பிடித்தம் செய்வதாக கூறப்படுகிறது.ரேஷன் ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், 'ஊதிய உயர்வை அறிவித்தால் தான், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவோம். இல்லையெனில், விடுப்பு எடுத்து, பணிக்கு வரமாட்டோம்' என, அவர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE