திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தலுக்கு முன், மார்ச் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மாவட்டத்தில், 11 லட்சத்து, 13 ஆயிரத்து, 122 ஆண்கள்; 11 லட்சத்து, 23 ஆயிரத்து, 632 பெண்கள்; 255 திருநங்கையர் என, 22 லட்சத்து, 37 ஆயிரத்து, ஒன்பது வாக்காளர் உள்ளனர்.தேர்தல் பிரிவினர் கூறியதாவது:வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி விரைவில் துவங்க இருக்கிறது. வாக்காளர் வசதிக்காக, செப்., 1 முதல், சரிபார்ப்பு பணி நடந்தது. மாவட்டத்தில், 99.50 சதவீதம் பேர், தங்களது விவரங்களை சரிபார்த்துள்ளனர்.வரும், 30ம் தேதியுடன், சரிபார்க்கும் அவகாசம் நிறைவு பெறுகிறது. எனவே, மீதியுள்ள வாக்காளரும், தங்களது போட்டோவை மாற்ற விண்ணப்பிக்கலாம்.
வரும், டிச., 16ல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, 2020 ஜன., 15ம் தேதி வரை, சுருக்கமுறை சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது. வரும், 30ம் தேதி வரை, சரிபார்ப்பு திட்டத்தில் செய்யும் விவரங்கள், உடனுக்குடன் 'அப்டேட்' செய்யப்படும். திருத்திய விவரங்கள் மற்றும் மாற்றப்பட்ட போட்டோக்களுடன், வரைவு பட்டியல் வெளியிடப்படும்.எனவே, இதுவரை போட்டோ மாற்றாமல் இருக்கும் வாக்காளர்கள், வரும், 30ம் தேதி மாலைக்குள், புதிய போட்டோக்களை 'அப்டேட்' செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.