திருப்பூர் : ஆயத்த ஆடைக்கான டியூட்டி டிராபேக்கை, 4.50 சதவீதமாக உயர்த்த வழங்கவேண்டும் என, ஏ.இ.பி.சி., டிராபேக் கமிட்டியிடம் முறையிட்டுள்ளது.
மத்திய அரசு, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, பல்வேறு வகை சலுகைகளை வழங்குகிறது. 'டியூட்டி டிராபேக்' சலுகையை நிர்ணயிப்பதற்காக, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரித்துறை, டியூட்டி டிராபேக் கமிட்டியை அமைத்துள்ளது.இந்த கமிட்டி, ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் உள்ள ஜவுளித்துறையினரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது. பெறப்படும் விவரங்கள் அடிப்படையில், டிராபேக் வழங்க அரசுக்கு பரிந்துரைக்கிறது. ஏற்றுமதி சலுகைகளை நிர்ணயிப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம், பெங்களூருவில், டிராபேக் கமிட்டி தலைவர் பிள்ளை தலைமையில், நேற்றுமுன்தினம் நடந்தது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தலைவர் மஹூ, துணை தலைவர் சக்திவேல் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் பங்கேற்றனர். பருத்தி ஆடைக்கான டிராபேக் சலுகை தற்போது, ஆடை மதிப்பில், 1.80 முதல் 2.2 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. இச்சலுகையை, 4.50 சதவீதமாக உயர்த்த வேண்டும். 2 முதல் 2.9 சதவீதமாக உள்ள கலப்பு இழை ஆடைக்கான சலுகையை, 4.36 சதவீதமாகவும்; செயற்கை இழை ஆடைக்கான சலுகையை, 3.61 சதவீதமாகவும் உயர்த்த வேண்டும்.
'டிராபேக்' சலுகைகளுக்கான உச்ச வரம்பு தொகையை நீக்க வேண்டும் என, ஏ.இ.பி.சி., சார்பில், கமிட்டியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகளை மதிப்பு கூட்டுவதற்காக, வெளிநாட்டு வர்த்தகர்களின் எதிர்பார்ப்புப்படி, எம்ப்ராய்டரி, இங்க் ரகங்கள் என பல்வேறுவகை பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது வழங்கப்பட்டுவரும் டியூட்டி டிராபேக் விகிதம் போதுமானதாக இல்லை; எனவே உயர்த்தி வழங்க வேண்டும் என, ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE