மதுரை,'மத்திய அரசு அறிவித்த 'நைபர்' நிச்சயம் மதுரையில் அமையும்' என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.மதுரையில் ரூ.1100 கோடியில் 'நைபர்' (தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) அமைக்கப்படும் என 2011ல் மத்திய அரசு அறிவித்தது. ஆமதாபாத், கவுகாத்தி, ஹாஜிபூரி, கோல்கட்டா, லக்னோ உள்ளிட்ட இடங்களும் இந்த அறிவிப்பில் இடம்பெற்றன. நைபரில் எம்.பார்ம்., மருந்தியல் ஆராய்ச்சி படிப்பு, மருத்துவ வேதியியல், இயற்கை மருந்து, பாரம்பரிய மருந்து, மருந்தியல் கூராய்வு, நச்சு இயல், உயிரி தொழில்நுட்பவியல் உட்பட 15க்கும் மேற்பட்ட படிப்புகள் ஏற்படுத்தப்படும்.மதுரை தவிர பிற இடங்களில் அமைக்கப்பட்டு, 'நைபர்' செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. மதுரையில் திருமோகூர் அருகே 116 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு மத்திய அரசிடம் ஒப்படைத்ததோடு சரி, எந்த வேலையும் நடக்கவில்லை. 8 ஆண்டுகள் ஆகியும் மதுரைக்கு 'நைபர்' எட்டாக்கனியாகவே உள்ளது.இதை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என நேற்று தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக 'இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும்' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.நமது நிருபரிடம் அவர், 'மதுரைக்கு அறிவித்த நைபர் திட்டத்தை கண்டிப்பாக கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். இதற்காக மத்திய அரசிடம் பேசுவோம்' என்றார்.