வால்பாறை : வனவிலங்கு - மனித மோதலை தடுக்க அட்டகட்டியில் ஆலோசனை நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வனவிலங்கு - மனித மோதலால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனால் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் வனவிலங்கு - மனித மோதல் குறித்த கூட்டத்தில், வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த தோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் மாரிமுத்து பேசியதாவது:வால்பாறை மலைப்பகுதியில் இயற்கையோடு இணைந்து மக்கள் வாழ்க்கை நடத்துவது மிகவும் பெருமையாக உள்ளது.
வனவிலங்கு - மனித மோதலை தடுக்க எஸ்டேட் நிர்வாகங்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள புதர்களை அகற்ற வேண்டும். யானைக்கு பிடித்தமான வாழை, பலா போன்றவை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல், சிறுத்தைக்கு பிடித்தமான நாய், கோழி, ஆடு போன்றவைகளை தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க கூடாது.வனவிலங்கு - மனித மோதலை தடுக்க வனத்துறையோடு, எஸ்டேட் நிர்வாகங்கள் இணைந்து செயல்படவேண்டும்.இவ்வாறு, பேசினார்.
கூட்டத்தில், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர்கள் நவீன்குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.