பொது செய்தி

தமிழ்நாடு

கொண்டங்கி ஏரி மதகு சேதம்: சீரமைப்பில் குறை இருப்பதாக புகார்

Added : நவ 27, 2019
Advertisement
 கொண்டங்கி ஏரி மதகு சேதம்: சீரமைப்பில் குறை இருப்பதாக புகார்

திருப்போரூர்:கொண்டங்கி ஏரியில், குடிமராமத்து திட்டத்தில் நடந்த சீரமைப்பு பணி, முழுமையாக நடைபெறவில்லை என, விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

திருப்போரூர் ஒன்றியம், கொண்டங்கி ஏரி, 650 ஏக்கர் பரப்பு உடையது. இந்த ஏரி, 287.94 மில்லியன் கனஅடியையும், 16.11 அடி ஆழத்தையும் கொண்டது.இந்த ஏரி நீரை நம்பி, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, கீழூர், மேலையூர் உள்ளிட்ட கிராமங்களில், 1,500 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஏரி, 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.இதனால், ஏரியின் மதகு, கலங்கல், கால்வாய் மற்றும் கரைப்பகுதி சேதமடைந்திருப்பதாக, பொதுமக்கள் கூறினர்; ஏரியில் சீரமைப்பு பணி மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, குடிமராமத்து திட்டத்தில், 71 லட்சம் ரூபாயில், ஏரியில் சீரமைப்பு பணி நடந்தது. ஜூலை மாதம் துவங்கிய சீரமைப்பு பணி, அக்டோபரில் முடிந்தது.இந்த திட்டத்தில், புதிய மதகுகள், கலங்கல் கட்டுதல், பாசன கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. ஆனால், இப்பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இது குறித்து, நெல்லிக்குப்பம் விவசாயிகள் சங்க தலைவர் கெஜராஜன் கூறியதாவது:குடிமராமத்து திட்டத்தில் நடந்த, ஏரி சீரமைப்பு பணி முழுமையாக நடைபெறவில்லை. ஏரியின் மதகு நீர் செல்ல, பாசன கால்வாய்க்கு அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்புகள் முழுமையாக கட்டப்படவில்லை.சில இடங்களில் விடுபட்டும், ஏற்கனவே இருந்த கால்வாயை சிமென்ட் பூசியும், ஒப்பேற்றி உள்ளனர்.பாசன கால்வாய் பகுதியின் பக்கவாட்டில், சிமென்ட் கலவை பூசி அமைக்கப்பட்ட பாறை கற்கள் சரிந்துள்ளன. முக்கியமாக, ஏரி மதகில் அமைக்கப்பட்ட, 'ஷட்டர்' சரியாக அமைக்கவில்லை.இதனால், ஏரியில் தேங்கிய தண்ணீர், மதகு வழியாக வீணாகி வருகிறது. மணல் மூட்டைகளால் அடைத்தாலும், தண்ணீர் செல்வது நிற்கவில்லை.பணி நடைபெறும் போதே, சில பணிகள் குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.சீரமைப்பு பணியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து, கலெக்டரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X