சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரி பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரி பாசன வாய்க்கால் பூதங்குடி வாய்க்கால் அள்ளூர், சாத்தமங்கலம், பரதுார், ஒரத்துார், கிளியனுார், ஆயிப்பேட்டை, சாக்காங்குடி, கீரப்பாளையம், வயலுார் வழியாக பாசிமுத்தான் ஓடையில் சென்று கலக்கிறது.இந்த வாய்க்காலில் சி.சாத்தமங்கலம் அருகே ஆகாயத்தாமரை படர்ந்து புதர்மண்டி கிடப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. வாய்க்காலை துார்வாரியும் படர்ந்திருந்த ஆகாயத்தாமரையை முற்றிலும் அகற்றாததால், மீண்டும் படர்ந்துள்ளது. இதனால் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வாய்க்கால் தண்ணீரை அப்பகுதி மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.தற்போது ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால், வாய்க்கால் தண்ணீர் மாசடைந்து காணப்படுவதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே பாசனவாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.