மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்விரு கோயில்களுக்கும் மதுரை 'சூறாவளி' சுப்பையர் என்பவர் தனது நிலங்களை தானமாக வழங்கினார். காலப்போக்கில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலங்கள் பலரிடம் கைமாறி ஆக்கிரமித்தது தெரிந்தது. அதை மீட்கக்கோரி சேலம் ராதா கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
ஆக்கிரமிப்பு நிலங்களை நில அளவைத்துறை மூலம் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் செயல் அதிகாரி ராமசாமியை நீதிமன்றம் நியமித்தது. அவரது தலைமையில் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் எதிரே 60 ஏக்கர் நிலம், திருப்பாலை ஜெ.கே.நகர் பகுதியில் 15 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு நிலங்களில் முழுமையாக அளவீடு பணி முடிந்ததும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். நீதிமன்றம் உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.