உடுமலை : உடுமலை பகுதிகளில், காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமாவதோடு, விவசாயிகள் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
உடுமலை அருகே, வன எல்லையிலிருந்து, 20 கி.மீ.,துாரம் உள்ள, வாளவாடி, மொடக்குப்பட்டி, விளாமரத்துப்பட்டி, வேலுார், எரிசனம்பட்டி, சின்னபொம்மன் சாலை, பாப்பனுாத்து, சர்க்கார்புதுார் ராவணாபுரம் மற்றும் கல்லாபுரம் என வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், நுாற்றுக்கணக்கான காட்டுப்பன்றிகள், கூட்டம், கூட்டமாக சுற்றி வருகிறது.இரவு நேரங்களில், மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. வனத்திலிருந்து வெளியேறிய காட்டுப்பன்றி கூட்டம், மொடக்குப்பட்டி ஓடையில் பதுங்கியிருந்து இரவு நேரங்களில் , விவசாய நிலங்களில் புகுந்து வருகிறது.
மனிதர்களை தாக்கி, பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதோடு, தோட்டத்துசாளைகளில் உள்ள மாடு, ஆடு மற்றும் நாய்களையும் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இக்கிராமங்களிலுள்ள 600 ஏக்கர் பயிர்கள் வரை காட்டுப்பன்றிகளால் சேதமடைந்துள்ளன. காட்டுப்பன்றியை கட்டுப்படுத்தும் வகையில், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு அனுமதியளித்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள், விவசாய நிலங்கள், கிராமங்களுக்குள் புகுந்து வருவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.