மாநில நெடுஞ்சாலையில் டிவைடர்கள் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநில நெடுஞ்சாலையில் 'டிவைடர்கள்' மாயம்

Added : நவ 27, 2019

உடுமலை : மாநில நெடுஞ்சாலையை, பாதுகாப்பாக கடக்க வைக்கப்பட்ட 'டிவைடர்'கள், மாயமாகியுள்ளதால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.பல்வேறு கிராமங்களில் இருந்து, பள்ளிக்கு வரும் மாணவர்கள், மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். அப்போது, ரோட்டில், வேகமாக வரும் வாகனங்களால், விபத்துகள் ஏற்பட்டது.இதனால், ஆவேசமடைந்த பெற்றோர் அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சோமவாரப்பட்டி மற்றும் பெதப்பம்பட்டியில், குடிமங்கலம் போலீஸ் சார்பில், டிவைடர்கள் வைக்கப்பட்டதால், வாகனங்கள் வேகம் குறைக்கப்பட்டு, விபத்துகள் தவிர்க்கப்பட்டன.

இந்நிலையில், சோமவாரப்பட்டியில், மாநில நெடுஞ்சாலையில் இருந்த 'டிவைடர்'களை குடிமங்கலம் போலீசார் எடுத்து சென்றனர். அவற்றை, மீண்டும் அப்பகுதியில், போலீசார் வைக்கவில்லை.இதனால், பள்ளிக்குழந்தைகள் ரோட்டை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அருகிலுள்ள கிராமத்திலிருந்து, பள்ளி வளாகத்திலுள்ள, மாற்றுத்திறன் பயிற்சி மையத்துக்கு, குழந்தைகளை பெற்றோர் அழைத்து வருகின்றனர். அப்போது, மாநில நெடுஞ்சாலையை கடக்க முடியாமல், பெற்றோர்கள் தவிக்கின்றனர்.

பெற்றோர் கூறுகையில், 'சோமவாரப்பட்டி, அம்மாபட்டி உட்பட கிராமங்களிலிருந்து வரும் குழந்தைகள், காலை நேரத்தில் மாநில நெடுஞ்சாலையை கடக்க முடிவதில்லை. அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் மோதி குழந்தைகள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பில், போலீசார் அலட்சியத்தை கைவிட வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X