விழுப்புரம்: விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் சாலையில், இயற்கை முறையில் மாப்பிள்ளை சம்பா பயிர் செழிப்பாக வளர்ந்துள்ளது.விழுப்புரம் அடுத்த எல்லீஸ்சத்திரம் சாலையில் பல ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. இந்த கால கட்டத்தில், விவசாயிகள் பலரும் தாங்கள் செய்யும் சாகுபடி, குறுகிய காலத்தில் வளர்ந்து அறுவடை செய்து லாபத்தை ஈட்டும் நோக்கத்தில், ரசாயன உரங்கள் மூலம் பயிரிடுகின்றனர்.இது போன்ற சூழலில், வழுதரெட்டியைச் சேர்ந்த விவசாயி வேல்முருகன், எல்லீஸ்சத்திரம் சாலையோரம் ஒன்றரை ஏக்கர் பரப்பில், இயற்கை முறையில் ரசாயன உரங்கள் இன்றி மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி செய்துள்ளார். 6 மாதங்களில் அறுவடை செய்யப்படும் இந்த நெல்லுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலாம். தண்ணீர் தேவை குறைவாக உள்ள பகுதிகளில் இரு தினங்களுக்கு ஒரு முறை கிணற்று நீரை மோட்டார் மூலம் இறைத்துக் கொள்ளலாம்.இதுகுறித்து வேல்முருகன் கூறுகையில், 'நான், கடந்த 3 ஆண்டுகளாக மாப்பிள்ளை சம்பா சாகுபடி செய்து வருகிறேன். இதற்கான விதை மதுரை பகுதியில் இருந்து வாங்கி வருகிறேன். இந்த நெல்லை முழுவதுமாக இயற்கையான முறையில், சேடை ஓட்டி, வேப்பம் புண்ணாக்கு, எரு இட்டு, நடவு செய்து சாகுபடி செய்கின்றேன்.இயற்கை முறையில் விளைவிக்கும் மாப்பிள்ளை சம்பா நெல்லுக்கு, மக்களிடம் அதிக மவுசு உள்ளது' என்றார்.இவர், மாப்பிள்ளை சம்பா மட்டுமின்றி, இயற்கையான முறையில், நெல் சாகுபடியில் பல வகைகளில் உள்ள பூங்காறு, சிக்கடி சம்பா, சீரக சம்பா, அறுபதாம் குறுவை, துாயமல்லி, இலுப்பூ சம்பா உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ளதாக தெரிவித்தார்.