திண்டிவனம்: திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளதால் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியில், பஸ் நிலையத்திற்குள் வராத பஸ்கள் பல்வேறு மார்க்கங்களுக்கு செல்கின்றன. எப்போதும் போக்குவரத்து பிசியான இடம் என்பதால், மேம்பாலத்தின் மேல்பகுதியில், சோடியம் விளக்குகள் அதிமாக போடப்பட்டுள்ளது.இந்த விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல், இருளில் மூழ்கியுள்ளது. மேம்பாலத்தின் மேல்பகுதியில், பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கக்கூடாது என போலீசார் எச்சரித்திருந்தாலும், புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், மேல்பகுதியில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன.இதன் காரணமாக அந்த பகுதியில் (திருவண்ணாமலை பஸ்கள் நிற்கும் இடம்) பயணிகள் சாலையை கடக்க வேண்டியுள்ளது. தற்போது மேம்பாலத்தின் மேல் மின் விளக்குகள் எரியாததால் அந்தப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இதனால் பயணிகள் சாலையைக் கடக்கும் போது, விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது.இதுமட்டுமின்றி மேம்பாலத்தின் கீழ்பகுதியில், பொது மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதை மூடப்பட்டு விட்டதால், மேம்பாலத்தின் படிக்கட்டு வழியாக ஏறி, மேலே வருகின்றனர். இதனால் மேல்பகுதியில் பொது மக்கள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.இதைக் கருத்தில் கொண்டு, மேம்பாலத்தின் மேல்பகுதியில் மின் விளக்குகள் எரிய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.