கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி - சோமனுார் ரோட்டில், புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கருமத்தம்பட்டி முதல் சோமனுார் வரையுள்ள ரோட்டின் நடுவில், டிவைடர் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஓரத்தில் மணல் குவிந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், கடும் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:கருமத்தம்பட்டி - சோமனுார் ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், சரக்கு ஆட்டோக்கள், டெம்போக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.ரோட்டின் நடுவில் உள்ள டிவைடர் கற்களின் இரு புறமும், கடந்த சில மாதங்களாக மணல், குப்பை குவிந்து கிடக்கிறது.
சோமனுார் வரை இதே போல் உள்ளது.வாகனங்களில் செல்லும் போதும், காற்று பலமாக வீசும் போதும், புழுதி பறக்கிறது. இதனால், மண் துகள்கள் கண்களை பதம் பார்ப்பதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். ரோட்டில் குவியும் மணலை, அடிக்கடி அப்புறப்படுத்தி வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், தற்போது, அகற்றுவதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.