பள்ளி மாணவியருக்கு ‛போக்சோ விழிப்புணர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவியருக்கு ‛போக்சோ' விழிப்புணர்வு

Added : நவ 28, 2019
 பள்ளி மாணவியருக்கு ‛போக்சோ' விழிப்புணர்வு

சென்னை:சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தடுக்க, பெரும்பாக்கம் அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 'போக்சோ' குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தந்தை, சகோதரர்கள், நெருங்கிய சொந்தங்கள், அக்கம் பக்கத்தினரால், சிறுமியர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.போலீசார், குற்றவாளிகளை போக்சோ சட்டத்தில் கைது செய்கின்றனர். இருப்பினும், விழிப்புணர்வு வழியாக, குற்றங்களை தடுக்க வேண்டி உள்ளது.பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய வளாகத்தில், அரசு ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இவர்களுக்கு, போக் சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு வழங்க, பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. நேற்று முன்தினம், 'வேர்ல்டு விஷன்' என்ற தன்னார்வ அமைப்பு, மாணவ - மாணவியருக்கு, போக்சோ குறித்த விழிப்புணர்வு வழங்கியது.

இதில், பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களிடம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, விளக்கப்பட்டது. ஆசை வார்த்தைகள் கூறுவது, பணம், பொருட்கள் வாங்கி கொடுக்கும் நோக்கம், கண்ட இடங்களில் தொடும்போது எச்சரிப்பது, கட்டாயப்படுத்தினால் பெற்றோரிடம் தெரிவிப்பது குறித்து, மாணவியரிடம் விளக்கப்பட்டது.மேலும், போக்சோ சட்டங்கள், தண்டனைகள், காவல் நிலையத்தை அணுகுதல், சட்ட உதவி பெறுதல் குறித்தும், மாணவ - மாணவியருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X