தேனி: தேனியில் தினமலர் நாளிதழ் சார்பில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக நடந்த 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக் காட்டுவோம் 2.0 வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். புதிய பாடத்திட்டத்தை எதிர்கொள்ள தேவையான வெற்றி ரகசியங்களை கற்றுத்தந்த கல்வியாளர்களின் ஆலோசனைகளால் சாதிப்பது உறுதி என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தனர்.மாணவர்கள் நலன்கருதி 'ஜெயித்துக்காட்டுவோம்', 'வழிகாட்டி', 'உங்களால் முடியும்' போன்ற கல்வி நிகழ்ச்சிகளை தினமலர் நாளிதழ் நடத்தி வருகிறது. பொதுத்தேர்வை எழுத உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை எளிதாக எதிர்கொள்வது எப்படி என விரிவாக எடுத்து கூறும் 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக் காட்டுவோம் 2.0' நிகழ்ச்சியை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் நிறுவனத்துடன் இணைந்து தற்போது நடத்துகிறது.இந்நிகழ்ச்சி தேனியில் நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கியது. ஏராளமான மாணவர்கள், பெற்றோர் காலை 8:45 முதலே குவியத்துவங்கினர்.நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பேசியதாவது:
படிப்பு என்ற ஆயுதம் வாழ்க்கையை மாற்றும்
கே.நித்யா, இணை இயக்குனர், சன் ஐ.ஏ.எஸ்., அகாடமி, சென்னை:
ஒரு விஷயம் கிடைக்கும் போது உதாசீனப்படுத்த கூடாது. கிடைக்காதவர்கள் ஏராளமானோர் வெளியில் காத்திருப்பார்கள். இங்கு வந்துள்ள மாணவர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும். அதுதான் உந்து சக்தி. உங்கள் தந்தை தினமும் அதிகாலை எழுந்து தனது பணியை தொடர்வதற்கு காரணம் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற உந்து சக்திதான். போட்டியாளரை முந்துவதில் கவனம் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு என்ன பிடித்துள்ளோதோ அதில் வெற்றி பெற வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிட்டு நம் பாதையை மாற்றி விடாதீர்கள். எல்லா பாதுகாப்பு அம்சங்கள் உள்ள குளத்தில் நீந்தி கரையேறுவது சாதனையல்ல. குளத்தில் உள்ள முதலைகள் முதலியவற்றை கடந்து நீந்தி கரை சேர்வதுதான் சாதனை. மாணவர்கள் நேரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் பரோட்டா மாஸ்டராக இரவில் பணி செய்து பகலில் படித்து சாதித்தவர், இன்று ஆந்திராவில் கலெக்டராக உள்ளார். இலக்கு நோக்கி பயணிக்கும் போதுதான் அதன்மதிப்பு தெரியும். மற்றவர்களை போல் எந்தநேரமும் அவர் படிக்கவில்லை. கிடைத்த ஆறு மணிநேரத்தில் படித்து சாதித்துள்ளார். நீங்கள் வெற்றியாளர் என்ற தகவல் கேட்டு பெற்றோர் சிந்தும் ஆனந்த கண்ணீர் தான் உலகில் விலை கொடுத்து வாங்க முடியாதது. படிப்பு என்ற ஒரே ஆயுதம் தான் உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும். வரலாற்றில் உங்கள் காலடியை திடமாக பதிக்க வேண்டும். அடுத்தவர் செய்வதை பார்த்து பொறாமைப்படுங்கள். அப்போதுதான் அது உங்களுக்கு உந்து சக்தியை கொடுக்கும். எது உங்களுக்கு விருப்பமாக இருக்கிறதோ அதில் மன வலிமையாக இருங்கள், வெற்றி பெறலாம்.
முழு ஈடுபாடு அவசியம்
எஸ்.செந்தில்குமார், உதவி பேராசிரியர், கோவை அமிர்தா பல்கலை: பிளஸ்1, பிளஸ்2 படிக்கும் மாணவர்களின் மிகப்பெரிய கேள்வி, அடுத்து என்ன படிப்பு, எந்தக்கல்லுாரியில் படிப்பது என்பது தான். படிப்பை எவ்வாறு தேர்வு செய்வது. எதில் மனம் ஆசைப்படுகிறதோ அதை முழு ஈடுபாட்டுடன் செய்தால் அந்த செயல் பாராட்டுபெறும். நேரத்தைவிட இலக்கு முக்கியம். சாதிக்க இலக்கை நிர்ணயித்து கொள்ள வேண்டும். உங்கள் இலக்கை மற்ற மாணவருடன் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்துவம் மிக்கவாராக இருந்தால்தான் வாழ்வின் ரசனை பிடிக்கும்.இலக்கை நிர்ணயித்துவிடுவீர்கள். சில சமயம் மனத்தடை இருந்தால் வெற்றி பெற முடியாது. மனம் கற்பனை கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும். அந்த கயிற்றில் பயம், சந்தேகம், தயக்கம் என்பவற்றை அவிழ்த்தால் வெற்றி இலக்கை அடையலாம். இந்தியாவில் உள்ள கல்லுாரிகளை என்.ஐ.ஆர்.எப்., அமைப்பு தரவரிசைப்படுத்தியுள்ளது. படிப்பை தேர்வு செய்ய ஆன்-லைனில் 'சைக்கோ மெட்ரிக் டெஸ்ட்' நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு நேரம் கிடைக்கும்போது 'ஆன்-லைன்' தேர்வு எழுதுங்கள். 50 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும், மனம், ஆற்றல், திறமை பற்றியதாக இருக்கும். அதில் உள்ள வினாக்களுக்கு பதில் அளித்தால் எந்தபடிப்பு படிக்கலாம் என தெரிவிக்கும்.படிப்பில் திட்டமிடல், வைரக்யம் அவசியம். துன்பம், தோல்விகளை துாக்கி வீசுங்கள். ஒவ்வொரு விதையும் மண்ணோடு மல்லுக்கட்டிதான் முளைக்கிறது. ஒவ்வொரு தோல்வியும் வெற்றியின் அடிப்படை.
'நீட்' தேர்வுக்கேற்ற புதிய பாடத்திட்டம்
எஸ்.சையது அபுதாகீர், தலைமைஆசிரியர், சி.பி.யு., மேல்நிலைப்பள்ளி, கம்பம்: மாணவர்கள் பிளஸ்1, பிளஸ் 2 வில் பெறும் மதிப்பெண்களே அவர்களின் எதிர்கால லட்சியத்தை அடைய உதவும் துாண்டுகோலாக அமைகின்றன. அனைவருக்கும் மூளைத்திறன் ஒரே அளவுதான். ஆனால் அதை பயன்படுத்துவதில்தான் வேறுபாடு உள்ளது. மூளைத்திறன் அதிகம் பயன்படுத்துவோர் புத்திசாலிகளாகின்றனர். புதிய பாடத்திட்டம் எந்த போட்டி தேர்வையும் எளிதில் வெற்றி பெற உதவும். 'நீட்', ஜே.இ.இ., டி.என்.பி.எஸ்.சி., போன்ற தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. இப் பாடத்திட்டம் சிந்தனையை துாண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட பொக்கிஷம். அறிவியல் பாடத்தில் சுற்றுச்சூழல், அறிவியல், மரபியல், மனித நலனும், நோய்களும், உயிரி தொழில் நுட்பவியல், புதிய வேதிப்பொருட்களின் உருவாக்கம் அதன் பயன்கள், புதிய ராக்கெட் தொழில் நுட்பம் என முழுமை பெற்ற பாடத்திட்டமாக உள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள க்யூ.ஆர்., கோடு அலைபேசி உதவியுடன் எந்த ஒரு பாடத்தை பற்றியும் எளிதில் அறிந்து கொள்ள உதவுகிறது. இதற்கு முன் பார்கோடு முறை தகவல்களை படுக்கை மட்டத்தில் மட்டும் தருவதாக இருந்தது. க்யூ.ஆர்.,கோடு தகவல்கள் செங்குத்தாக உள்ளதே அதன் சிறப்பு. பழைய பாடத்திட்டத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து தகவல்கள் 'நீட்' தேர்வுக்கு 25 முதல் 30 சதவீதம் மட்டுமே இருக்கும். புதிய பாடத்திட்டத்தில்' நீட்' தேர்வுக்கான அனைத்து தகவல்களும் உள்ளடங்கியுள்ளது.
100 சதவீத மதிப்பெண் பெறலாம்
ச.சிங்காரவேலு, வணிகவியல் \ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஓ.சிறுவயல், காரைக்குடி: புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அறிவியல் பாடத்தில் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் இருக்கும். கலை பாடத்தில் நேரத்திற்கு நேரம் மாறுபடும். புதிய பாடத்திட்டம் வந்த பின் ஆசிரியர்கள்தான் அதிகம் படிக்கின்றனர். சி.ஏ. படிக்க எந்த குரூப் என விதி விலக்கு இல்லை. முதல் குரூப் எடுத்தவர்களும் சார்டர்டு அக்கவுண்ட்ன்ட் படிக்கலாம். உலகளவில் 7,500 கம்பெனிகளுக்கு சி.ஏ. படித்தவர்கள் மிக குறைவாக உள்ளனர். இதற்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் தேவை உள்ளது. சி.ஏ. படித்தவர்கள் மிக குறைவு. பாஸ்ட் அக்கவுண்டன்ட்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். 16 பாடத்திட்டங்கள் படித்து தேர்வு எழுதினால் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெற கூடிய வாய்ப்பு உள்ளது. எந்த பாடத்திட்டதிலும் இல்லாத வகையில் தமிழக பாடநுாலில் சொற்களஞ்சியம் உள்ளது. போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு உதவும். வணிகவியல் பாடத்தில் கலைச்சொற்கள் இருக்கும். இதில் கற்பனை திறன் பாடத்தை ஒட்டியே இருக்க வேண்டும். பாடத்தை விட்டு விலகக் கூடாது. மாணவர்கள் பன்முக திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். படிப்பதோடு டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றால் பயனாக இருக்கும். வாய்ப்புகள் எங்கு உள்ளது என்பதை தேடிதேர்வு செய்ய வேண்டும். புதிய பாடத்திட்டத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற முடியும்.
படிப்புக்கு துணை
பயனுள்ள நிகழ்ச்சி
ஷர்மிளா தேவி, பிளஸ் 2, பி.சி. கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, தேனி: புதிய பாடத்திட்டத்தில் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என குழப்பமாக இருந்தது. 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சி எப்படி தேர்வுக்கு தயாராக வேண்டும், படிப்பில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர வைத்தது. நமது இலக்கு எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது.
'நீட்' தேர்வுக்கு
' டிப்ஸ்' கார்த்தியாயினி, பிளஸ் 1, நாடார் வித்யாலயா பள்ளி, தேனி: புதிய பாடத்திட்டத்தில் நன்கு படித்தால் போட்டி தேர்வுகளிலும், 'நீட்' தேர்விலும் வெற்றி பெற முடியும் என்ற 'டிப்ஸ்' கிடைத்தது. கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்தேன். மாணவர்கள் பயன்பெற தினமலர் நாளிதழ் நடத்தும் நிகழ்ச்சியும், அதன் மாணவர் பதிப்புகளும் பயன்படுகின்றன.
தைரியம்
சரண், பிளஸ் 2, இசட்.கே.எம். மேல்நிலைப்பள்ளி, போடி: இரவில் பரோட்டா மாஸ்டர் வேலை பார்த்து கொண்டே பகலில் படித்து கலெக்டர் ஆனவரின் கதை நாமும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. தாழ்வு மனப்பான்மை நீக்கி நாமும் சாதிக்க முடியும் என்ற தைரியம் ஏற்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தை நன்கு படித்தால் போட்டி தேர்வுக்கு தயாராகலாம் என புரிந்து கொண்டேன்.
ஆசையை திணிக்கக் கூடாது
சாந்தி, பெற்றோர், எஸ். ரங்கநாதபுரம்: வணிகவியல் படிப்பிற்கு எவ்வளவு வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை உணர்ந்து கொண்டேன். குழந்தைகள் மீது பெற்றோரின் ஆசையை திணிக்க கூடாது என தெரிந்து கொண்டேன். குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர் எவ்வாறு துணையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தினர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. பஸ் வசதி இல்லாத மயிலாடும்பாறை, தும்மக்குண்டு, அரசரடி பகுதி மாணவர்கள் 200 பேரை வேல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பினர் தனி வேன்களில் அழைத்து வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE