தான் நடித்த முதல் படத்திலேயே, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து, முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் ஜெயம் ரவி. பூமி படத்தை அடுத்து, பொன்னியின் செல்வன் படத்தில், அவர் நடிக்க உள்ளார். இவரது சகோதரரும், இயக்குனருமான மோகன் ராஜா, தற்போது நடிகராகவும் மாறி விட்டார்.
இருவரின் பெற்றோரான, எடிட்டர் மோகன் - வரலட்சுமி ஆகியோர், தனித்தனியாக புத்தகங்கள் எழுதி உள்ளனர். அது குறித்து ஜெயம் ரவி, மோகன் ராஜா நம்மிடம் பேசியது:உங்கள் குடும்பத்தில் நடக்க உள்ள முக்கிய நிகழ்வு குறித்து?அப்பாவும், அம்மாவும், அவர்களின் வாழ்க்கை அனுபவத்தை, புத்தகங்களாக தனித்தனியாக எழுதியுள்ளனர். அப்பா, 'தனிமனிதன்' என்ற பெயரிலும், அம்மா, 'வேலியற்ற வேதம்' என்ற பெயரிலும், புத்தகம் எழுதியுள்ளனர். டிச., 3ல், இந்த புத்த கங்களை வெளியிடுகிறோம்.இரண்டு புத்தகத்தின் சிறப்பு என்ன?காமெடி நடிகர் டணால் தங்கவேலுவின் வளர்ப்பு மகனான என் அப்பா,சினிமாவில், சின்ன சின்ன வேலைகளை செய்து, இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். தன் அனுபவம் முழுவதையும், இப்புத்தகத்தில் தொகுத்துள்ளார். அப்பா தான்எங்களுக்கு ஹீரோ.அவரை, ஏன் நாங்கள் இந்தளவு கொண்டாடுகிறோம் என்பதை, இந்த புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.சினிமாவின் அனைத்து துறைகளையும், அப்பாவிடம் தான் கற்றுக் கொண்டோம்.திருக்குறள் போதிக்கும் அறம், மற்ற அனைத்து இலக்கியங்களிலும் உள்ளதை ஆராய்ந்து, இன்றைய தலைமுறைக்கு பயன்தரும் வகையில், 'வேலியற்ற வேதம்' புத்தகத்தை அம்மா எழுதியுள்ளார்.
அப்பா போல் டெக்னீஷியனாக மாறாமல், நடிகராகவும், இயக்குனராகவும் ஆனது ஏன்?
அப்பா நடிகனாக ஆசைப்பட்டு தான், சென்னை வந்தார். ஆனால், எடிட்டர் ஆகிவிட்டார். எங்களை, அவரது கனவான இயக்குனராகவும், நடிகராகவும் மாற்றினார்.
அப்பா, அம்மாவுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையாக எதை நினைக்கிறீர்?
ரீலே ஓட்டப்பந்தயத்தில் நான்கு சுற்று ஓட வேண்டும் என்றால், அதில் மூன்று சுற்றை அவரே ஓடி விட்டு, ஜெயிக்கிற சுற்றை மட்டும் எங்களிடம் தந்துள்ளார். அதை நாங்கள் பொறுப்பாக செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆசை.அம்மா காந்தி கிராமத்தில் படித்தவர். காந்தியின் நல்ல குணங்களை, அம்மாவிடம் பார்த்து வளர்ந்துள்ளோம். 'மூன்று பேரிடம் நான் ஏமாந்தாலும், ஐந்து பேருக்கு நான் நல்லது செய்கிறேன்' என, சொல்வார். இங்கு பிறந்தது நாங்கள் பெற்ற வரம்.பெற்றோருக்கு, நாங்கள் எந்த வகையிலும் கைமாறு செய்ய முடியாது.
அப்பாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் திட்டம் உண்டா?
இதைவிட வேறு பாக்கியம் எங்களுக்கு இல்லை. அப்பா ரோலில், ஜெயம் ரவி நடிப்பார். மோகன் இயக்குவார். இதை வெப்சீரிஸாக கொண்டு வரவும் ஆசை உள்ளது.
இயக்குனர் மோகன் ராஜா, நடிகராக மாறிவிட்டாராமே?
இயக்குனர் மோகன் ராஜா நடிகராகி விட்டால், ஜெயம் ரவி இயக்குனராகி விடவேண்டியது தான்.
பொன்னியின் செல்வன் படத்தில், ஜெயம் ரவி மகன் ஆரவ் நடிக்கிறாரா?
இந்த படத்தில் ஆரவை நடிக்க வைக்க கேட்டுள்ளனர். இன்னும் முடிவு எடுக்கவில்லை.
ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள்?
லஷ்மண் இயக்கத்தில், பூமி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்படத்தில், நிதி அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். அடுத்ததாக, அஹமத் இயக்கத்தில் ஒரு படம். இதில், டாப்சிநாயகியாக நடிக்கிறார். அதன் பின், பொன்னியின் செல்வன்.ஜெயம் ரவி எப்போது அரசியலுக்கு வருவார்?நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன். ஓட்டு போடுகிறேன் அல்லவா!
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE