சென்னை:'தி.நகர் நடைபாதை வளாகத்தில், 'செல்பி' எடுத்து அனுப்புவோருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்படும்' என, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.
தி.நகர் பகுதிகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், 33 கோடி ரூபாய் செலவில்,உலக தரத்திலான நடைபாதை அமைக்கப்பட்டது. பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை, 2,395 அடி நீளமும், தணிகாசலம் சாலை முதல் போக் சாலை சந்திப்பு வரை, 1,247 அடி நீளமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. போக் சாலை முதல் அண்ணா சாலை வரை, 1,853 அடி நீளம் வரை என, மூன்று பகுதிகளாக, உலக தரத்திலான நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.பிரகாசமான தெருவிளக்குகள், மேம்படுத்தப்பட்ட கழிப்பிடங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தேவையான பேட்டரி கார்கள் இங்கு இயக்கப்படுகின்றன. இந்த நடைபாதை வளாகத்தை, சமீபத்தில், முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.
நடைபாதை வளாகத்தில் நடந்து சென்று, 'செல்பி' எடுத்து, 'chennaiwalksahead' என்ற வலைதள பக்கத்தில் அனுப்பி வைக்க, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம், பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. அவ்வாறு அனுப்பி வைப்போரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, ஐந்து பேருக்கு பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.