கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மேலவளவு கொலையில் விடுவிக்கப்பட்ட 13 பேர் கிராமத்திற்குள் நுழைய தடை வேலூரில் தங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 28, 2019
Advertisement

மதுரை:மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேரும் மேலவளவிற்குள் நுழையக்கூடாது; வேலுார் மாவட்டத்தில் தங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் ரத்தினம் தாக்கல் செய்த மனு: மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் 1997ல் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த ராமர் உட்பட 13 பேரை எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி முன்கூட்டியே விடுவிக்க நவ.,8ல் அரசு அரசாணை பிறப்பித்தது. இதில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை. அரசாணை பிறப்பிக்கும்முன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கம் கோரவில்லை. அரசின் செயல்பாட்டில் பாரபட்சம் உள்ளது. அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.அரசாணை குறித்து ஏற்கனவே விசாரணையின்போது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, '13 பேருக்கும் மேலுார் டி.எஸ்.பி., மூலம் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தவிட்டது.நேற்று நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பில், '13 பேரும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் 2008ல் 3 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களால் எவ்வித பிரச்னையும் இல்லை' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், 'அரசுக்கு சமூகத்தைப் பற்றி கவலை இல்லை. இதர கொலை வழக்கோடு இதை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. 'இனிமேல் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது' எனக்கூறியபடியே வெட்டி கொலை செய்துள்ளனர். பாதிக்கப்பட்டர்களின் குடும்பத்தை பற்றி அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை,' என்றனர். பின் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: தற்போதைய நிலையில் அரசாணைக்கு தடை விதிக்க விரும்பவில்லை. நன்னடத்தையுடன் நடந்து கொள்வதாக 13 பேரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது உத்தரவாத பத்திரம் அளித்துள்ளனர்.மேலவளவில் தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது.* சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 பேரும் மேலவளவிற்குள் நுழையக்கூடாது.* அவர்கள் வேலுார் மாவட்டத்தில் தங்க வேண்டும். மாதத்தின் ஒவ்வொரு 2 மற்றும் 4 வது ஞாயிறுகளில் வேலுார் மாவட்ட நன்னடத்தை அலுவலர் முன் ஆஜராக வேண்டும்.* மாதத்தின் முதல் மற்றும் 3 வது ஞாயிறுகளில் வேலுார் எஸ்.பி., முன் ஆஜராக வேண்டும்.* வேலுாரில் அவர்கள் தங்கும் முகவரி, அலைபேசி எண்ணை வேலுார், மதுரை எஸ்.பி.,களிடம் 13 பேரும் அளிக்க வேண்டும். இந்நீதிமன்ற அனுமதியின்றி அலைபேசி எண்ணை மாற்றக்கூடாது.* இந்நீதிமன்ற அனுமதியின்றி வேலுார் மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது.* முகவரியை மாற்றினால் அவ்விபரத்தை மதுரை, வேலுார் எஸ்.பி.,க்களிடம் தெரிவிக்க வேண்டும்.* 13 பேருக்கும் பாஸ்போர்ட் இருந்தால் அதை உடனடியாக மதுரை எஸ்.பி.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.* நன்னடத்தையுடன் நடந்து கொள்வதாக 13 பேரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது உத்தரவாத பத்திரம் அளித்துள்ளதை சரியாக பின்பற்ற வேண்டும்.* இவ்வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை மனுதாரர் மற்றும் எந்த ஒரு அமைப்பும், 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஊடகம் அல்லது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கக்கூடாது.* இவ்வழக்கு முடிவுக்கு வரும்வரை இவ்விவகாரம் தொடர்பாக பேச எந்த ஒரு அமைப்பிற்கும் கூட்டம் நடத்த மதுரை எஸ்.பி., அனுமதிக்கக்கூடாது. மேலவளவில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை எஸ்.பி., உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் 13 பேர் தரப்பில் ஜன.,2 க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜன.,6 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X