கோத்தகிரி : மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஆண்டு தோறும் பள்ளிகளில் தர மதிப்பீடு செய்து வருகிறது.
இதற்காக, கல்வி அதிகாரிகள் கொண்ட குழு செயல்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில், நடப்பாண்டு, 140க்கும் மேற்பட்ட பள்ளிகள் தர மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உத்தரவுபடி, குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் கார்த்திக் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, குண்டாடா அரசு ஆங்கில நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தது.பள்ளியில், அடிப்படை வசதி, கற்றல் கற்பித்தல் திறன் மேம்பாடு, தலைமைப் பண்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட, ஏழு அம்சங்களின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டது.
மேலும், விளையாட்டு மற்றும் திறன் போட்டியில் சாதித்த மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கற்றல் திறன் குறைந்த மாணவ, மாணவியர் மீது, தனி கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் ஆங்கில ஆசிரியை மல்லிகா குமார் உட்பட, ஆசிரியர், ஆசிரியைகள் உடன் இருந்தனர்.