பந்தலுார் : பந்தலுார் அருகே, சேரம்பாடி நாயக்கன்சோலை வனத்தில், குட்டியானை இறந்ததையடுத்து, தாய் யானை மற்றும் 7 யானைகள் அங்கு முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், வனத்துறையினர், பொதுமக்கள் இணைந்து, நேற்று இரவு, இறந்த குட்டி யானையை கயிற்றால் கட்டி, டிராக்டர் மூலம், சாலைக்கு இழுத்து வந்துள்ளனர். இதனை பார்த்த யானைகள் அனைத்தும் கோபத்துடன் வந்து, பொதுமக்களையும், வனத்துறை யினரையும் துரத்தின.
அத்துடன், அங்கிருந்த கோவில் கட்டடத்தை சேதப்படுத்தின. 8 பைக்குகள், இரண்டு வனத்துறை வாகனங்களை நொறுக்கின. சேரம்பாடியிலிருந்து-நாயக்கன்சோலை கிராமத்திற்கு செல்லும் சாலையில், யானைகள் ஆக்ரோசத்துடன் முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் கிராமத்திற்கு செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். பள்ளி, கல்லுாரி, வேலைகளுக்கு சென்றவர்கள், வீடு திரும்ப முடியாததால், பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. யானைகள், அங்கிருந்த மக்களை, ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு துரத்தி உள்ளன. இந்த சூழ்நிலையில், வனத்துறையினர், யானைகளை விரட்ட முடியாமல், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.