அவிநாசி : வடுகபாளையம் ஊராட்சி, முத்தரையர் காலனியில், சுகாதார சீர்கேடால், வீட்டை காலி செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என, தெரிவிக்கப்பட்டது.அவிநாசி, வடுகபாளையம் ஊராட்சி, முத்தரையர் காலனியில் வசிப்போர், நேற்று அவிநாசி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரியிடம் மனு வழங்கினர்.
அதில், 'முத்தரையர் காலனியில், சுடுகாடு வரை, ரோட்டின் இருபுறமும் புதர்மண்டி கிடக்கிறது. இதனால், பஸ்கள் செல்ல முடிவதில்லை. பள்ளி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் பாதிக்கின்றனர். சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சுகாதாரகேடு அதிகமாக உள்ளது. தெரு விளக்கு, ஒளிர்வதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, மனுவில் கூறியிருந்தனர்.மா.கம்யூ., ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி கூறுகையில், ''முத்தரையர் காலனியில் வீடுகளுக்கு இடையே சாக்கடை கால்வாய் அடைபட்டிருப்பதால், துர்நாற்றம் வீசி சுகாதாரகேடு ஏற்படுகிறது. \
பலரும், காய்ச்சலால் பாதிக்கின்றனர்; இதனால், ஓரிரு குடும்பத்தினர், வீட்டை காலி செய்து, மாற்றிடம் சென்றுவிட்டனர். சுகாதாரப் பிரச்னைக்கு, சம்மந்தப்பட்ட துறையினர் தீர்வு காண வேண்டும்,'' என்றார்.