திருப்பூர் : விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய, பள்ளி மாணவருக்கு பாதுகாப்பாக வாகனம் இயக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் (ஆர்.டி.ஓ.) போக்குவரத்து போலீஸ், வட்டார போக்குவரத்து துறையினர் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பல்லடம் 'வெர்டெக்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கலெக்டர் விஜயகார்த்திகேயன், போலீஸ் துணை கமிஷனர் பத்ரிநாராயணன் இணைந்து கண்காட்சி அரங்கை திறந்து வைத்தனர்.
வடக்கு ஆர்.டி.ஓ., குமார், தெற்கு ஆர்.டி.ஓ., முருகானந்தம் வரவேற்றனர்.கண்காட்சியின் ஒரு பகுதியாக, 'சீல் பெல்ட்' அணிந்து வாகனம் இயக்கினால் விபத்தின் போது காயம் ஏற்படாது, விபத்தின் போது டிரைவருக்கு காயம் ஏற்படாமல் இருக்க 'ஏர்பேக்' திறப்பது, இடது, வலது, பின்புற கண்ணாடிகளை கவனித்து பாதுகாப்பாக டூவீலர், கார் இயக்குவது குறித்து உபகரணங்கள் உதவியுடன் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.ஐந்து பள்ளிகளை சேர்ந்த, 250 மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, மாணவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். போக்குவரத்து போலீஸ் கமிஷனர் கஜேந்திரன், வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் சித்ரா, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பஸ் ஏற்பாடுகண்காட்சி அரங்கை பள்ளி மாணவர்கள் பார்வையிட வசதியாக இன்றும், நாளையும் இரு நாட்கள் கண்காட்சி அரங்கம், செயல்முறை விளக்க அமர்வு செயல்படுகிறது. கண்காட்சிக்கு வந்து, பார்வையிட விரும்புவோர் வசதிக்காக பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 94437-93767 என்ற எண்ணில் அழைக்கலாம்.