சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டீக்கடையில் வாலிபருக்கு கத்திக்குத்து

Added : நவ 28, 2019
Advertisement

பாரிமுனை: வியாசர்பாடியைச் சேர்ந்தவர், ஞானமணி, 33. இவர், பாரிமுனை, கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள டீக்கடை ஒன்றில், நேற்று பஜ்ஜி சாப்பிட்ட போது, டீக்கடைக்காரருக்கும், ஞானமணிக்கும் கைகலப்பானது. இதில், டீக்கடை ஊழியரான பீஹாரைச் சேர்ந்த அருண், 21, ஆத்திரத்தில், ஞானமணியை தலை, கழுத்தில் கத்தியால் வெட்டி தப்பினார்.ஞானமணி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பூக்கடை போலீசார், அருணை கைது செய்தனர்.
மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மாநகராட்சி பள்ளி அருகே கஞ்சா விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தண்டையார்பேட்டை போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை நடத்திய போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெண்ணிடம் விசாரித்தனர்.அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், அவரது பையை சோதனையிட்ட போது, சிறு, சிறு பொட்டலங்களில், 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.விசாரணையில், காசிமேட்டைச் சேர்ந்த லட்சுமி, 55, தண்டையார்பேட்டையை சேர்ந்த கார்த்திக், 20, என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
40 சவரன் நகை திருடியோர் சிக்கினர்
நொளம்பூர்: மேற்கு முகப்பேரைச் சேர்ந்தவர்இ வசந்தகுமாரி, 70. இவர் ஆறு மாதத்திற்கு முன், தன் கணவருடன் அமெரிக்காவில் உள்ள மகளை பார்க்க சென்றார். சின்ன நொளம்பூரைச் சேர்ந்த வள்ளி, 40, என்பவர், மாதம் ஒருமுறை வீட்டை சுத்தம் செய்து வந்தார்.இரு தினங்களுக்கு முன், வள்ளி வீட்டை சுத்தம் செய்ய சென்றபோது, பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நொளம்பூர் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில், நொளம்பூரைச் சேர்ந்த அருண், 28, ராஜ்குமார், 23 ஆகிய இருவரும், வசந்தகுமாரி வீட்டில், திருடியது தெரியவந்தது. நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 40 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
7 பேருக்கு, 'குண்டாஸ்'
வேப்பேரி: திருமுல்லைவாயல், பெரியார் நகரைச் சேர்ந்தவர், கோபாலகிருஷ்ணன், 24. இவர் உட்பட நான்கு பேர் மீது, கொலை வழக்கு உள்ளது. கீழ்ப்பாக்கம், குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்தவர், நாகராஜ், 25. இவர் மீது, அடிதடி வழக்குகள் உள்ளன. பல்லாவரத்தைச் சேர்ந்த கணேஷ், 23, ஆதம்பாக்கம், மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல், 21, ஆகியோர் மீது, அடிதடி, கொலை முயற்சி வழக்கு உள்ளது. இவர்கள், ஏழு பேரையும், கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, போலீசார் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
மின் கசிவால் தீ விபத்து
ராயப்பேட்டை: ராயப்பேட்டை, ராஜசேகரன் தெருவைச் சேர்ந்தவர், சண்முகம், 51. இவரது வீட்டில் உள்ள, 'ஏசி' நேற்று முன்தினம் இரவு, தீ பற்றி எரிந்தது. மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தில், 'ஏசி, லேப்டாப்' உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள், முற்றிலும் எரிந்து நாசமாகின. ஏசியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிகிறது. தீயணைப்பு வீரர்கள் கூறினர். ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கத்தியுடன் சுற்றியோருக்கு, 'கம்பி!'
பாண்டிபஜார்: பாண்டிபஜார் போலீசார், நேற்று முன்தினம் இரவு, அபிபுல்லா சாலை - திருமலைபிள்ளை சாலை சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டூ - வீலரில் கத்தியுடன் வந்த, உணவு டெலிவரி வாலிபர்கள் இருவரை, மடக்கினர். விசாரணையில், கிருஷ்ணாம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 20, அருண், 20, என்பதும், தங்களை தாக்கியோரை பழிவாங்க தேடி சென்றதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், இரண்டு கத்திகளை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வியாபாரி கைது
செம்மஞ்சேரி: ஒடிசாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் பிரதான், 30. நேற்று முன்தினம், சோழிங்கநல்லுார், பொன்னியம்மன் கோவில் தெருவில், கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். செம்மஞ்சேரி போலீசார், நேற்று, சந்தோஷ் பிரதானை கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
12 சவரன் நகை திருட்டு
திருவான்மியூர்: திருவான்மியூர், பாலு தெருவைச் சேர்ந்தவர் தனசேகர், 32; ஐ.டி., ஊழியர். இரு தினங்களுக்கு முன், குடும்பத்துடன் ஆரணி சென்று, நேற்று வீடு திரும்பினார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 12 சவரன் நகை திருடுபோனது. திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X