பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே, கோவில் பூட்டை உடைத்து, உண்டியல் மற்றும் சுவாமி சிலையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த அரியராவியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி, 60, என்பவர், பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் பூஜை முடிந்து, இரவு, 7:00 மணியளவில் கோவிலை பூட்டி சென்றார்.நேற்று காலை, 6:00 மணியளவில் அப்பகுதி மக்கள் பார்த்தபோது, கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அம்மனின் அலங்காரம் கலைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, அரை அடி உயர வெண்கல காளியம்மன் சிலை மற்றும் உண்டியல் திருடு போனது தெரிந்தது.கிராம மக்கள், கோவில் பகுதியை சுற்றி பார்த்தபோது, அருகில் உள்ள சவுக்கு தோப்பில், காலி உண்டியல் மற்றும் காளியம்மன் சிலையை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளதை கண்டுபிடித்தனர்.உண்டியலில் இருந்த, 7,000 ரூபாய், அம்மன் நகைகள் 1 சவரன் திருடு போனதாக, பெண்ணாடம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.