பொன்னேரி:வானம் பார்த்த பூமிகளில், சம்பா பருவத்திற்கு, நெல் பயிரிட்ட விளைநிலங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால், அவை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
மீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா பருவத்திற்காக, 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நெல் பயிடப்பட்டு உள்ளது.போலாச்சியம்மன்குளம், கணவன்துறை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள், பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியை ஒட்டி அமைந்து உள்ளன. இப்பகுதிகளில், நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேற்கண்ட கிராமங்களில், நீர்நிலைகளில் தேங்கும் மழைநீரை கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை சம்பா பருவத்தின் போது, நெல் பயிரிடப்படுகிறது.இந்த ஆண்டு, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பரவலான மழை பெய்தது. இதனால், வழக்கத்திற்கு மாறாக, மேற்கண்ட கிராமங்களில் முன்கூட்டியே நடவு பணிகள் தொடங்கப்பட்டன.
அதற்கேற்றார்போல், அக்டோபர் மாதம் வரை, அவ்வப்போது மழை பொழிந்து வந்தது.நெற்பயிர்களும் நன்கு வளர்ந்து வந்த நிலையில், ஒரு மாதமாக மழை பொழிவின்றி கிடக்கிறது. நெற்பயிர்களில் கதிர்விடும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல், விளைநிலங்கள் பாதித்து வருகின்றன.நீர்நிலைகளில் உள்ள தண்ணீரையும், டீசல் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி விளைநிலங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருகிறது.அதுவும் போதுமானதாக இல்லாத நிலையில், விளைநிலங்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.மழை பொழிவு இருந்தால் தான், நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்பதால், விவசாயிகளும் மழை வருமா என, தினமும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE