காரை புரட்டிபோட்ட நாய்!
அமெரிக்காவின் லுாசியானாவில் நபர் ஒருவர் தனது எஸ்.யூ.வி.காருக்கு பெட்ரோல் பங்கில் நின்றபடி எரிவாயு நிரப்பி கொண்டிருந்தார். அப்போது காருக்குள் இருந்த சிவாவா என்ற குட்டி நாய் காரை பின்னோக்கி செலுத்தியுள்ளது. இதனால் காரும் பரபரப்பான சாலையில் பின்னோக்கியபடி சென்றது. சிறிது நேரத்திலேயே கார் பின்னோக்கி உருண்டு தலைகீழாக விழுந்தது. இதுதொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளம்பெண் நுாதன திருட்டு
தென் அமெரிக்காவின் வெனிசுலாவில் பெண் ஒருவர் நுாதனமான முறையில் திருடி மாட்டிக் கொண்ட சம்பவம் வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் துணிக்கடையில் புகுந்து எட்டு ஜீன்ஸ் பேன்ட்டுகளை அணிந்து கொண்டு தப்பிக்க முயன்றபோது கையும் களவுமாக சிக்கி விடுகிறார். பின்னர் திருடிய ஜீன்ஸ் பேன்ட்டுகளை ஒவ்வொன்றாக கழற்றி திருப்பி தருகிறார். இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டதில் இருந்து 40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதை பார்த்துள்ளனர்.
நட்பாக பழகும் கரடி!
மெக்ஸிகோவில் உள்ள சிப்பின்கு சூழியல் பூங்காவில் கருப்பு கரடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ஒரு கரடி மிகவும் நட்புடன் பழகி வருகிறது. இது தொடர்பாக சுற்றுலா பயணி எடுத்துள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் பெண் ஒருவரின் அருகில் மனிதனை போல் நிற்கும் அந்த கரடி பின்னர் அப்பெண்ணின் தலைமுடியை லேசாக தடவி பார்க்கிறது. தொடர்ந்து எவ்வித தொந்தரவும் செய்யாமல் அங்கிருந்து அமைதியாக நகர்கிறது. கரடியின் இந்த செயல். பலரையும் கவர்ந்துள்ளது. எனினும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிஜமானது வாசகம்
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ். டிப்ளமோ படித்து வந்தார். அதிவேகமாக செல்லும் பைக்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் ஆகாஷ் அவரது பைக்கின் பின்பக்கத்தில் 'என் வேகம் ஒரு நாள் என்னை கொல்லும்; அதற்காக யாரும் அழ வேண்டாம்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். தனது நண்பருடன் பைக்கில் வேகமாக சென்றபோது சின்னாண்டிக்குழி என்ற பகுதியில் பனைமரத்தில் மோதியுள்ளார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்; அவரது நண்பர் உயிர் தப்பினார். வாசகத்தை போன்றே நிஜத்திலும் நடந்த இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் உன்னத சேவை
அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தை சேர்ந்தவர் சியரா ஸ்ட்ராங்பீல்ட். இவர் கர்ப்பமாக இருந்த போது மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது வயிற்றில் இருந்த குழந்தைக்கு ட்ரிசோமி என்ற மரபணு நோய் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே 'குழந்தை பிறந்தாலும் நீண்டநாள் வாழாது; கருவை கலைத்துவிடலாம்' என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு சியரா மறுப்பு தெரிவித்தார். குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே இறந்து போனது. இதையடுத்து குழந்தையின் நினைவாக தனது தாய்ப்பாலை தானம் செய்ய முடிவு செய்தார். அதன்படி 63 நாட்களில் 500 அவுன்ஸ் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கினார். தாய்மையின் மகத்துவத்தை உணர்த்திய இப்பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE