கம்பம் : மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திராட்சை பழம் வரத்து துவங்கியுள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பழம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் தான் திராட்சை சாகுபடியில் முதல் இடம் பிடிக்கிறது. அதற்கு அடுத்து ஆந்திரா, தமிழகம் உள்ள்ளிட்ட சில மாநிலங்களில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே தான் இங்கு திராட்சை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. மாநிலத்தில் ஒரே ஒரு ஒயின் தொழிற்சாலையும் இங்கு தான் உள்ளது. ஆனால் மழை, பனிக்காலங்களில் செவட்டை, சாம்பல் நிற நோய் தாக்கும்.பழங்கள் உடைந்து போகும்.
நவம்பர் மாதம் துவங்கி ஜனவரி வரை மஹாராஷ்டிராவில் இருந்து விதையில்லா திராட்சை பழம் வரத்து இருக்கும். அந்த சீசனில் கம்பம் பள்ளத்தாக்கில் போதிய பழங்களும் இருக்காது. இருக்கும் குறைவான மகசூலுக்கு விலையும் கிடைக்காது. அந்த நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து பழம் வரத்து ஆரம்பமாகியுள்ளது. இதனால் கம்பம் பழத்திற்கு விலை கிலோவிற்கு ரூ. 30 தான் கிடைக்கிறது.விவசாயிகள் கூறுகையில், மஹாராஷ்டிரா பழம் பொதுவாக நவம்பர் மாதம் இறுதியில் வரத்து இருக்கும். ஆனால் இந்தாண்டு நவம்பர்முதல் வாரத்திலேயே வர துவங்கிவிட்டது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பழத்திற்கு விலை குறைவாக கிடைக்கிறது. மழை காரணமாக இப்பகுதி பழம் வரத்தும் குறைவாவே உள்ளது,' என்றனர்.