சென்னை இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள, தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து, அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என,இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட பதவிகள் உள்ளன. இதில், நகர்ப்புற உள்ளாட்சிகளில், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு, நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, கவுன்சிலர்களை மட்டும் தேர்ந்தெடுக்க, வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். ஆனால், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய, நான்கு பதவிகளுக்கு, வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டுச்சீட்டு முறையில், இத்தேர்தல் நடக்கஉள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி, தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும், டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி என, இரண்டு கட்டமாக, இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதற்கான நடவடிக்கைகள் குறித்து, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், இன்று காலை, 11:30 மணிக்கு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலர் சுப்பிரமணியம் ஆகியோர், ஆலோசனை நடத்துகின்றனர். இதில், 'மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்பட வேண்டும்; ஓட்டுப்பதிவை அறிய உதவும், 'வி.வி.பேட்' பொருத்திய நவீன ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க, அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.