விருதுநகர் : பாதாளசாக்கடை பணிக்காக புதியதாக போடப்பட்ட மதுரை ரோட்டையும் விருதுநகர் நகராட்சி நிர்வாகத்தினர் சிதைத்ததோடு ஆங்காங்கே தார் டின்களை வைத்து பெரும் இடையூறை ஏற்படுத்தி உள்ளனர்.
'பாதாள சாக்கடையா ...ஆள விடுங்கய்யா சாமி ' என்ற குரல் மக்களிடையே இன்றும் தாரக மந்திரமாக ஒலிக்கிறது .கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இதன் தொல்லையை அனுபவிப்பவர்கள் விருதுநகர் மக்களே .நகரில் எந்த ரோட்டிலும் நடந்து கூட செல்ல முடியாது . எங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் மேன்ஹோல் வழியாக வெளியேறுகிறது. ரோடுகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு எங்கும் பெரும் பள்ளங்களாக உள்ளது. நல்லா இருந்த ரோடுகளையும் நாசப்படுத்தி விட்டாங்க.
இதில் வேறு தெருக்களையும் விட்டு வைக்கல.விருதுநகர் மதுரை ரோடு எப்போது எல்லாம் புதுப்பிக்கிறாங்களோ உடனே நகராட்சி நிர்வாகம் தன் பங்குக்கு ரோட்டை துவம்சம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. ரோடு போடும்போதே மேன்ஹோல் பணிகளை முடிப்பது கிடையாது . குண்டும் குழியுமாக காட்சி அளித்த மதுரை ரோட்டுக்கு விடிவு ஏற்படும் வகையில் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட அதன் தொடர்ச்சியாக தற்போதுதான் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை ரோடு புதியதாக போடப்பட்டது. 'அப்பாடா...' என பொதுமக்கள் பெருமூச்சு விடும்நேரத்தில் இதை பொறுக்காத நகராட்சி நிர்வாகம் தனது வழக்கமான ரோடு துவம்சம் பணியை துவக்கி விட்டது.
ரோட்டின் அனைத்து மேன்ஹோலையும் திறந்து வைத்து மதுரை ரோட்டையே சின்னாபின்னமாக்கி விட்டனர். சரி ...இதன் பணியைதான் முடித்தார்களா என்றால் அதுவும் இல்லை. இதுவும் வாரக்கணக்கில் நீண்டு கொண்டே செல்கிறது .இதை பார்த்து சகஜமாகி போன அப்பாவி மக்களும் இதன் சிரமத்தை தினமும் சந்திக்கின்றனர்.விபத்திற்கு வித்திடுகிறதுமதுரை ரோட்டில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தார்டின்கள் விபத்திற்கு வித்திடும் வகையில் உள்ளது. மதுரை பஸ்கள் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலும் அதிகமாக ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் தான் இதற்கு காரணம்.சாதிக், தனியார் ஊழியர், விருதுநகர்.
ஏன் இத்தனை நாட்கள்நகராட்சி நிர்வாகத்தின் பணிகள் ஏன் இத்தனை நாட்கள் இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் அப்பாவி மக்கள் தான் சிரமத்தை சந்திக்கின்றனர். நீண்ட நாட்கள் கழித்து மாநில நெடுஞ்சாலைத்துறை ரோட்டை சீரமைத்தாலும் அதை நகராட்சி நிர்வாகம் உடைத்து சேதப்படுத்தியது வேதனை அளிக்கிறது.திருமாறன், ரியல் எஸ்டேட், விருதுநகர்.10 நாட்களுக்குள் சரியாகி விடுமாம்ரோடு போடும்போது 'பாதாளசாக்கடை குழாய்களில் அதிகப்படியாக ஜல்லி கற்கள், தார் கலவைகள் கொட்டப்பட்டுள்ளன. அகற்றும் பணி கடந்த மாதமே நடந்தது.
மீண்டும் மேன்ஹோலில் கழிவுநீர் வெளியேற படிப்படியாக ஜல்லி கற்களும், தார் கலவைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. மேன்ஹோல் உயர்த்தும் பணி விரைவில் துவங்கும். அதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் நிலைமை சீராகும்.பார்த்தசாரதி, நகராட்சி ஆணையாளர், விருதுநகர்