கூடலுார் : பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ள காஞ்சிமரத்துறை ரோட்டை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் அங்கு நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
கூடலுாரில் இருந்து காஞ்சிமரத்துறை செல்லும் ரோடு 9 கி.மீ., துாரம் கொண்டதாகும். பளியன்குடி, வெட்டுக்காடு, ஊமையன்தொழு பகுதிகளுக்கு இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் விளைநிலங்கள் அதிகம் உள்ளதால் விவசாயிகள் இந்த ரோட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த சில மாதங்களாக சீரமைக்காமல் குண்டும் குழியுமாக இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் பல இடங்களில் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அவசர நேரங்களில் கூடலுாருக்கு வாகனங்களில் வர முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பல முறை மனு கொடுத்தும் இந்த ரோட்டை சீரமைக்க மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் நேற்று இப்பகுதி மக்கள் சேறும் சகதியுமாக இருந்த ரோட்டில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக போலீசார் தெரிவித்தைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.