விருதுநகர் : விருதுநகரின் மாவட்டத்தில் முக்கிய பதவிகளில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள், அலுவலர்களால் துறை ரீதியான நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படுவதுடன் திட்டங்களை செயல்படுத்துவதிலும் சுணக்கம் நீடிக்கிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் ,அதிகாரிகள் காலிப்பணியி டங்களால் கூடுதல் பொறுப்பு வகித்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விருதுநகர் நகராட்சியில் சுகாதார அலுவலர் இதுவரை நியமிக்கப்படாததால் சுகாதார ஆய்வாளர் தான் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். திருத்தங்கல் நகராட்சியில் இன்றுவரை ஆணையாளர் நியமிக்கப்படவில்லை. விருதுநகரில் காதி உதவி இயக்குனராக பணியாற்றும் குமார் புதுக்கோட்டையில் கூடுதல் பொறுப்பு பார்க்கிறார்.
லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.,யாக மதுரை டி.எஸ்.பி., சத்தியசீலன் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருசாமி மதுரையிலும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் சமுக பாதுகாப்பு திட்ட அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.இதே போன்று காலி பணியிடங்களும் தாராளமாக உள்ளன. மின்வாரியத்தில் உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. சி.இ.ஓ., அலுவலகத்தில் மேல்நிலை பள்ளிகளின் நேர்முக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. நிலையான இடத்தில் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் அதிகாரிகளுக்கு உள்ளூரின் நிலைமை தெரியாமல் போவதுடன் நடவடிக்கையிலும் அலட்சியம் தொடர்கிறது.
அதிகபட்சம் திட்டங்களின் நிலை குறித்து சமாளிப்பதற்கான பதில் மட்டுமே அளிக்கின்றனர். இது விருதுநகர் மாவட்டத்திற்கு பல ஆண்டுகளாக சாபகேடாகவே உள்ளது. இதை முறைப்படுத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.