நெட்டப்பாக்கம்: மடுகரையில் பராமரிப்பின்றி, சீரழிந்துள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடுகரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு படிப்புடன், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில்,சிவன் கோவில் அருகில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. அதில் ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்பு வலை போன்று ஏணி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பூங்காவில், அக்கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்து வந்தனர்.இந்நிலையில், பராமரிப்பின்றி விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால், சிறுவர்கள் வருகை குறைந்தது. மேலும், பூங்காவை சுற்றி அமைத்திருந்த வேலியும் சேதமடைந்தது.தற்போது, அப்பகுதி மக்கள் பூங்காவை குப்பை கொட்டும் இடமாகவும், மாடுகள் கட்டும் தொழுவமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.பொலிவிழந்து கிடக்கும் சிறுவர் பூங்காவை சீரமைத்து, சிறுவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.